சென்னை : அரசின் குறைகளை சொல்ல ஆளுநர் அரசியல்வாதி அல்ல என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் வெளியேறிய நிலையில், அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, “வரும் 24-ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். நாளை மறைந்த சட்டசபை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்படும். வரும் 22, 23 தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடக்க உள்ளன. 24ம் தேதி முதலமைச்சர் பதிலுரை வழங்க உள்ளார்.
ஆளுநர் உரையை வாசித்து சட்டமன்றத்துக்கு அளிப்பதுதான் அவருக்கு அளிக்கப்பட்ட கடமை. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை இப்படி செய்தால் ஏற்பார்களா?. அரசின் குறைகளை சொல்ல ஆளுநர் அரசியல்வாதி அல்ல. ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து பேசலாம். சபை மரபு, சட்டத்திட்டத்துக்கு உட்பட்டு நாங்கள் பேசுகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசின் குறைகளை சொல்லலாம். ஆளுநர் அவருக்கு உரிய பணியை அவர் செய்ய வேண்டும். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவாக தேசிய கீதம் பாடப்படும். இந்த மரபு ஒருபோதும் மாற்றப்படாது.”இவ்வாறு தெரிவித்தார்.
