×

எஸ்ஐஆர் குறித்த உத்தரவுகளை வாட்ஸ்-அப்பில் அனுப்பக் கூடாது: தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் தீவிர திருத்த பட்டியலுக்கு எதிராக மேற்குவங்கம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் ஜோய்மால்யா பாக்‌ஷி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அதில்,\” மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் இரண்டு கோடி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பல உத்தரவுகள் பிறப்பிக்கப் படுகின்றன. வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘அனைத்து உத்தரவுகளையும் வாட்ஸ் ஆப் மூலம் எப்படி வெளியிட முடியும். அவ்வாறு செய்யக் கூடாது. அது சரியான நடைமுறையும் கிடையாது. உரிய முறையில் சுற்றறிக்கை மூலம் உத்தரவுகளை வெளியிடப்பட வேண்டும். குறிப்பாக இரண்டு கோடி வாக்காளர்கள் மன அழுத்தத்தில் உள்ளதை தேர்தல் ஆணையம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் என்ன காரணங்களுக்காக வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதை விரிவாக தெரிவித்தும் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். இதனை அனைத்து கிராம பஞ்சாயத்து அலுவலகங்களிலும் வெளியிட வேண்டும்.

வாக்காளர்கள் போதிய ஆவணங்களை தாக்கல் செய்து விண்ணப்பிக்க ஏதுவாக பஞ்சாயத்து அலுவலகங்களை பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்து பத்து நாட்கள் வரை வாக்காளர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். தேவைப்பட்டால் மேலும் அதனை அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் விண்ணப்பித்ததற்கான அத்தாட்சியை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags : SIR ,WhatsApp ,Supreme Court ,Election Commission ,New Delhi ,Chief Justice ,Surya Kant ,Justices ,Dipankar Dutta ,Joymalya Bakshi ,West Bengal government ,Election Commission of India ,
× RELATED கர்நாடகாவில் 5 மாநகராட்சிக்கு வாக்கு சீட்டு முறையில் தேர்தல்