- பாஜக
- ராஜஸ்தான் SIR
- காங்கிரஸ்
- புது தில்லி
- ராஜஸ்தான் மாநிலம்
- ஜனாதிபதி
- கோவிந்த் சிங் தோடஸ்ரா
- சட்டசபை
- திக்காரம் ஜூல்லி…
புதுடெல்லி: ராஜஸ்தான் எஸ்ஐஆர் பணியில் காங்கிரசுக்கு ஆதரவான வாக்காளர்கள் பெயர்களை பட்டியலில் இருந்து மோசடியாக நீக்க பாஜ சதி செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டோடாஸ்ரா, அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் திக்காராம் ஜூல்லியுடன் இணைந்து டெல்லியில் கட்சி தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) கணக்கெடுப்பு பணிக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் 45 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். வரைவு பட்டியலில் ஜனவரி 15 வரை திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. ஜனவரி 3ம் தேதி வரை எந்தக் குழப்பமும் இல்லை. முழு அமைப்பும் சீராக இயங்கிக்கொண்டிருந்தது. ஜனவரி 3ம் தேதி, பாஜ தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ராஜஸ்தானுக்கு வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திச் சென்றார்.
அதன் பிறகுதான் வாக்குகளை மோசடியாகச் சேர்ப்பதும் நீக்குவதும் தொடங்கியது. தேர்தல் ஆணைய இணையதள தரவுகளின்படி, டிசம்பர் 17 முதல் ஜனவரி 14 வரை, பாஜ 937 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பிஎல்ஏ) மூலம் 211 பெயர்களைச் சேர்க்கவும், 5,694 வாக்குகளை நீக்கவும் விண்ணப்பங்களை சமர்பித்திருந்தது. வரைவு பட்டியலில் ஆட்சேபனை தெரிவிப்பதற்கான அவகாசத்தை ஜனவரி 19ம் தேதி வரை நீட்டித்தது தேர்தல் ஆணையம். இந்த நீட்டிப்பு காலத்தில், காங்கிரஸ் சித்தாந்தத்துடன் தொடர்புடையவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டயலில் இருந்து நீக்குவதற்கு பாஜவும் தேர்தல் ஆணையமும் கூட்டுச் சேரும் என்று நாங்கள் ஏற்கனவே சந்தேகித்தோம். சரியாக அதுவேதான் நடந்தது. ஜுன்ஜுனு தொகுதியில் ஒரே நாளில் 13,882 படிவம் 7 விண்ணப்பங்களும், மாண்டவாவில் 16,276, உதய்பூர்வதியில் 1,241 மற்றும் கேத்ரியில் 1,478 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
ஜனவரி 13 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலத்திற்கு வந்து முதல்வர் இல்லத்தில் தங்கியிருந்தார். எனவே, ஜனவரி 3 மற்றும் 13ம் தேதிக்கு இடையில் ரகசிய நடவடிக்கை நடந்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 10,000 முதல் 15,000 போலி கணினிமயமாக்கப்பட்ட படிவங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அமைச்சர்கள் உட்பட அனைத்து எம்எல்ஏக்களும் 13, 14, மற்றும் 15ம் தேதிகளில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான படிவங்கள் விநியோகித்து்ளனர்.
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற சட்டப்பேரவை தொகுதிகளை இலக்காகக் கொண்டு இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காங்கிரஸ் சித்தாந்தத்துடன் தொடர்புடையவர்களின் பெயர்களை நீக்குவதற்காகவும் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. பாஜ அரசு மீது அதிருப்தி உள்ளவர்களும் குறிவைத்து நீக்கப்பட்டுள்ளனர். விதிமுறைகளின்படி, வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, பிஎல்ஓக்கள் ஒரு நாளைக்கு 10 படிவங்களை மட்டுமே விநியோகிக்க முடியும். ஆனால், பாஜ எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், போலி வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் கையொப்பங்களுடன் ஆயிரக்கணக்கான படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். எஸ்ஐஆர் என்ற பெயரில் ஜனநாயக கொலை செய்து, வாக்குத் திருட்டு செய்ய பாஜ விரும்புகிறது. பயன்படுத்தப்பட்ட அனைத்துப் படிவங்களையும் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்திடமும் உச்ச நீதிமன்றத்திடமும் வலியுறுத்துகிறோம் என்றார்.
