- பிரதமர் மோடி
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
- ஜனாதிபதி
- இந்தியா
- புது தில்லி
- முகமது பின் சயீத் அல் நஹ்யான்
- மோடி
- நஹ்யான்
புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் 2 மணி நேர பயணமாக நேற்று இந்தியா வந்தார். பிரதமர் மோடி – அதிபர் நஹ்யான் இடையேயான சந்திப்பில், இருதரப்பு வர்த்தகத்தை 6 ஆண்டில் 200 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நேற்று மாலை டெல்லி வந்தார். டெல்லி விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி நேரில் சென்று அதிபர் நஹ்யானை வரவேற்றார். இது அதிபர் நஹ்யானின் வருகைக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக பதவியேற்ற பிறகு நஹ்யான் மேற்கொள்ளும் 3வது இந்திய பயணம் இது. ஈரான்-அமெரிக்க உறவுகளில் ஏற்பட்டுள்ள புதிய விரிசல் உட்பட மத்திய கிழக்கில் நிலையற்ற சூழல் நிலவும் வேளையில் அதிபர் நஹ்யான் 2 மணி நேரத்திற்கும் குறைவாகவே டெல்லியில் தங்கினார். பிரதமர் மோடியின் இல்லத்திற்கு சென்று அவர் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், 2032 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை தற்போதைய 100 பில்லியன் டாலரில் இருந்து 200 பில்லியனாக இரட்டிப்பாக்குவதென இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மேலும், அபுதாபி அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான அட்நாக், இந்தியாவின் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு 0.5 மில்லியன் மெட்ரிக் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) வழங்குவதற்கான 10 ஆண்டு கால ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. உயர் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்தவும், விண்வெளி உள்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும் வணிகமயமாக்கலில் ஒத்துழைக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த சந்திப்பில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
* ஊஞ்சல், சால்வை பரிசு
தனது இல்லத்திற்கு வந்த அதிபர் நஹ்யான் மற்றும் அவரது தாயார் ஷேக்கா பாத்திமா பின் முபாரக் அல் கெத்பியை பிரதமர் மோடி வரவேற்றார். அவர்களுக்கு குஜராத்தின் கைவினைத் திறனை காட்டும் பாரம்பரிய வடிவமைப்புகளுடன் கூடிய மர ஊஞ்சல் மற்றும் தெலங்கானாவில் செய்யப்பட்ட வேலைப்பாடுகளுடன் கூடிய வெள்ளிப் பெட்டியில் காஷ்மீர் பஷ்மினா சால்வையையும் பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.
