கிருஷ்ணகிரி, ஜன.20: உத்தனப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே திடீரென ஓடிய மான் மீது, டூவீலர் மோதிய விபத்தில், வாலிபர் பலியானார். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா சீரியம்பட்டி அருகே உள்ள கோட்டூரைச் சேர்ந்தவர் வஞ்சிக்கோன்(32). இவர் ஓசூரில் தனியார் பைப் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று தனது டூவீலரில், கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் இருந்து, ஓசூர் நோக்கி சென்றுள்ளார்.அதியமான்கோட்டை-நேரலூர் தேசிய நெடுஞ்சாலையில், காலை 10 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறத்தில் இருந்து, வலதுபுறம் நோக்கி புள்ளிமான் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்தது.
அப்போது வஞ்சிக்கோன் ஓட்டி வந்த டூவீலர், கட்டுப்பாட்டை இழந்து, மான் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வஞ்சிக்கோன் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் டூவீலர் மோதியதில், தூக்கி வீசப்பட்ட மானும் துடிதுடித்து உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உத்தனப்பள்ளி போலீசார், வஞ்சிக்கோனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சானமாவு பீட் வனக்காப்பாளர் பிராங்கிளின், விபத்தில் பலியான மானின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோபசந்திரம் வனத்துறை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
