போச்சம்பள்ளி, மார்ச் 4: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இ-நாம் முறையில் கொப்பரை ஏலம் நடந்தது. கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.153க்கும், குறைந்த பட்சமாக ரூ.76.99க்கும், சராசரியாக ரூ.150க்கும் விற்பனையானது. இதில் 4546 கிலோ கொப்பரை ரூ.6,31,267க்கு விற்பனையானது. இதன் மூலம் 56 விவசாயிகள் பயணடைந்தனர். போச்சம்பள்ளி ஒழுங்கு முறை கூட கண்காணிப்பாளர் அருள்வேந்தன் கூறுகையில், இங்கு தேசிய மின்னணு வேளாண் சந்தைமுறையில் விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஏலத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதனால் விவசாயிகளின் கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்தது. விற்பனை தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. விவசாயிகள் கொப்பரை, பருத்தி உள்ளிட்ட பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து, கூடுதல் வருவாய் பெறலாம் என்றார்.
