புதுடெல்லி: கரூரில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து நடிகர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் 5.30 மணி நேரம் விசாரணை நடத்தினர். வழக்கத்தை விட இந்த முறை விசாரணை கடுமையாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் இடம்பெறும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், கடந்த அக்டோபர் மாதம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. சிபிஐ அதிகாரிகள் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரை டெல்லி அழைத்து விசாரித்தது. இந்நிலையில் சிபிஐ அனுப்பிய சம்மன் அடிப்படையில் கடந்த 12ம் தேதி விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகி இருந்தார்.
இதை தொடர்ந்து அவரிடம் பிரசார கூட்டத்திற்கு நீங்கள் காலதாமதமாக வந்ததுதான் இந்த துயர சம்பவத்திற்கு காரணமா என்ற கோணத்தில் சுமார் ஏழு மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மறுநாளும் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், விஜய் தரப்பில் கேட்டுக்கொண்டதால், விசாரணை தேதியை சிபிஐ அதிகாரிகள் தள்ளி வைத்தனர். இதையடுத்து விஜய்யை வரும் 19ம் தேதி அதாவது நேற்று (19ம் தேதி) மீண்டும் ஆஜராக வேண்டும் என்று கடந்த 13ம் தேதி சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சிபிஐ அனுப்பிய சம்மன் அடிப்படையில் ஆஜராக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி வந்தடைந்தார். இதை தொடர்ந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர் நேற்று காலை சுமார் 10.30 மணி அளவில் கரூர் துயர சம்பவம் தொடர்பான விவகாரத்தில் சாட்சியம் மற்றும் விளக்கம் அளிக்க டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவருடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் சென்றனர்.
இதையடுத்து சிபிஐ எஸ்.பி. சுனில் குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், ‘‘தவெக பொதுக்கூட்டம் நடத்த வெளிநாடுகளில் இருந்து பணம் பெறப்பட்டதா? அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதற்கான கணக்கீட்டு விளக்கம் என்ன, சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் தொகை பெறப்பட்டதா, அதற்கான ஆதாரங்கள் என்ன, இதற்கு யார் உடந்தையாக செயல்பட்டனர். குறிப்பாக பிரசார கூட்டம் நடத்துவதற்கும், கட்சியை நடைமுறைப்படுத்துவதற்கும், உங்களுக்கான செலவினங்கள் எப்படி முறைப்படுத்தப்படுகிறது. அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதில் குறிப்பாக கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது அதனை தவிர்க்க என்ன நடவடிக்கை எடுக்க உங்களது தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நிலவரம் மிகவும் மோசமானதாக நீடித்தது, கண் எதிரே இருந்த உங்களுக்கு தெரியவில்லையா?. சூழலை புரிந்து கொண்டு அபாயத்தை தடுத்திருக்க வேண்டாமா?. குறிப்பாக பிரசார கூட்டத்திற்கு தாமதமாக வந்த நீங்கள், பிரச்னை என்று வந்த பின்பு உடனடியாக அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறியது ஏன் என்பதுபோன்ற கோணங்களில் சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.
குறிப்பாக விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது,”கரூர் பிரசாரத்தின் போது தமிழ்நாடு காவல்துறை வழங்கியுள்ள சிசிடிவி காட்சிகளில் தண்ணீர் பாட்டில்கள் வீசுவது தெரிகிறது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட அதே சமயத்தில் தான் வீசியுள்ளார்கள். அப்போது கூட்ட நெரிசலை நீங்கள் பார்க்கவில்லையா. குறிப்பாக ஏழு மணி நேரம் தாமதமாக வந்தது ஏன் என்ற கேள்விக்கு சாலைகளில் பல்வேறு வளைவுகள் இருந்துள்ளது. அவற்றையெல்லாம் கடந்து வர தாமதமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளீர்கள். தாமதம் வளைவுகளால் மட்டும் தான் ஏற்பட்டது என்றால், அதற்கான ஆதாரம் என்ன என்பதை இன்றே சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூட்ட நெரிசல் தொடர்பாக காவல்துறை பொது அறிவிப்புகளை தொடர்ந்து செய்து வந்துள்ள வீடியோக்களை சமர்ப்பித்துள்ளனர். அதே சமயம் உங்களுடைய வாகனம் கூட்டத்தில் தொடர்ந்து முன்னேறி சென்று வருவதையும் காட்சிகளில் பார்க்க முடிகிறது. கூட்ட நெரிசலை தடுக்க வாகனத்தை நிறுத்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து கூட்டத்தில் பேசிக் கொண்டு இருந்ததற்கான காரணம் என்ன? வாகனத்தின் மேல் இருந்த உங்களுக்கு கீழே நிலைமை மோசமாகி இருந்ததை அறியவில்லையா? குறிப்பாக நடந்தவற்றையெல்லாம் அடிப்படையாக கொண்டும், உங்களிடம் பெற்ற சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களை ஆகியவற்றின் அடிப்படையிலும் உங்களது பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்க அதிகப்படியான வாய்ப்புள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் நேரடியாகவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கரூர் துயர சம்பவம் தொடர்பான விவகாரத்தில் பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில், அதாவது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே முதற்கட்ட குற்றப்பத்திரிகை சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சிபிஐ அதிகாரிகள் கேள்விகளுக்கு விஜய் அளித்த பதிலில், ” இந்த விவகாரத்தில் இருக்கும் ஆதாரங்களை நாங்கள் முழுமையாக தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து சாட்சியம் மற்றும் வாக்குமூலங்களை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து சுமார் ஐந்தரை மணி நேர விசாரணைக்கு பின்னர் விஜய் உள்ளிட்ட அனைவரும் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்தனர். விஜய் முகம், கடந்த விசாரணையை விட இந்த முறை கடுமையாகவும், கோபமாகவும் இருந்தது. அவரிடம் விசாரணை கடுமையாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது விசாரணை முடிந்ததாக அறிவிக்கப்பட்டாலும் மேலும் பல தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
