×

பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.850 கோடிக்கு மது விற்பனை

 

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.850 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கடந்த 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தொடர்ந்து 5 நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில், 3,240 டாஸ்மாக் கடைகளில் பார்கள் உள்ளன. டாஸ்மாக் மதுக்கடைகளை பொறுத்தவரை தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவுக்கு மதுவிற்பனை நடைபெறும். சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் விற்பனை கூடுதலாக இருக்கும். மேலும், தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை விடுமுறை நாட்களில் விற்பனை எப்போதும் உச்சத்தைத் தொடுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு புத்தாண்டு தினத்தன்று டிச.31 மற்றும் ஜன 1 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் ரூ.400 கோடிக்கு மது விற்பனையாகின.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஆண்டு சுமார் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சுமார் ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடந்துள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் போன்ற மண்டலங்களில் குறிப்பிடத்தக்க அளவு விற்பனை பதிவாகியுள்ளது. நகர்ப்புறங்களில் இருந்து மக்கள் கிராமங்களில் பொங்கல் கொண்டாட சென்றதால் நகரப் பகுதிகளை காட்டிலும் கிராமப்புறங்களில் மது விற்பனை கணிசமாக கூடி இருந்தது. குறிப்பாக கடந்த 14ம் தேதி போகி பண்டிகையின் போது ரூ.217 கோடியும், பொங்கல் பண்டிகையின் போது ரூ.301 கோடியும் என இரண்டு நாட்களுக்கு ரூ.518 கோடி வரை மது விற்பனை செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக சென்னை ரூ.98.75 கோடி, மதுரை – 95.87 கோடி, திருச்சி – ரூ.85.13 கோடி, சேலம் – ரூ.79.59 கோடி, கோவை – ரூ.76.02 கோடி என தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளது. பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளுவர் தினம் என்பதால், டாஸ்மாக் கடைகள் அன்றைய தினம் மூடப்படும். இதனால் பெரும்பாலானோர் பொங்கல் அன்றே மது வாங்கி வைத்ததால் விற்பனை சற்று அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜன.13, 14, 16 ஆகிய 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இதில், பொங்கல் சமயத்தில் 2 நாட்களில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.454 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு கூடுதல் வருமானம் மது விற்பனை மூலம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Pongal festival ,Chennai ,TASMAC… ,
× RELATED மணலூர்பேட்டை சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு