- வட-கிழக்கு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- புதுச்சேரி
சென்னை: தமிழகத்தில் இதுவரை நீடித்து வந்த வட கிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து நேற்றுடன் விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. முன்னதாக, கேரளாவில் பெய்து வந்த தென் மேற்கு பருவமழையின் தாக்கம் செப்டம்பர் மாதம் வரையில் தமிழகத்திலும் நீடித்தது. அதன் காரணமாக வட கிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழை செப்டம்பர் மாதத்தில் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான், அக்டோபர் மாதம் பெய்யத் தொடங்கிய வட கிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்பட்ட அளவில் மழையை கொடுக்கவில்லை. இருப்பினும் ஒன்றிரண்டு புயல்கள் வங்கக் கடலில் உருவான போதும், இந்த பருவத்தில் பெரிய அளவில் புயல்களின் தாக்குதல் ஏதம் இன்றி தமிழகம் தப்பித்தது என்று சொல்ல வேண்டும். இருப்பினும், இயல்பாக அக்டோபர் முதல் தேதியில் இருந்து நேற்று வரையில் கூடுதலாக 164 சதவீதம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், இந்த வடகிழக்கு பருவமழை அக்டோபர் தொடங்கி 2026 ஜனவரி இறுதி வரை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே மழை படிப்படியாக குறைந்து நின்று தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. அதேநேரத்தில் காலையில் பனிப்பொழிவும், ஒரு சில இடங்களில் பனி மூட்டமும் நீடித்து வருகிறது. இதுதவிர இரவு நேரங்களில் கடும் குளிர்க்காற்றும் வீசி வருகிறது. குறிப்பாக தர்மபுரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது. மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து வறண்ட வானிலை நீடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வட கிழக்கு பருவமழை நேற்றுடன் தமிழகம், புதுச்சேரியில் விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
