சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு மெரினா காமராஜர் சாலையில் முப்படை வீரர்களின் அணிவகுப்புடன் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடந்தது. நாட்டின் குடியரசு தின விழா வரும் 26ம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைப்பார். பிறகு முப்படைகளின் அணிவகுப்பு, தமிழ்நாடு அரசின் துறைகள் சார்ந்த வாகனங்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்.
இதற்கான முதற்கட்ட பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 7 மணிக்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முப்படைகளான ராணுவம், கடற்படை, வான்படை வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆர்.பி.எப் வீரர்கள், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கண்கவரும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஆடல் பாடல்களுடன் நடந்தன. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு மெரினா காமராஜர் சாலை முதல் போர் நினைவு சின்னம் வரையிலான சாலையில் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் ெசய்யப்பட்டது.
