×

ஒன்றிய அரசுக்கு எதிராக பிப்.7ம் தேதி முதல் விவசாயிகள் யாத்திரை: குமரி முதல் காஷ்மீர் வரை நடக்கிறது

 

நாகர்கோவில்: அகில இந்திய ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தென்மண்டல ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் முன்னிலையில் நடந்த கூட்டத்திற்கு தமிழக தலைவர் அய்யாகண்ணு தலைமை வகித்தார். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் அனைத்து மாநில முதல்வர்களை சந்தித்து வலியுறுத்துவதற்காக அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் ஜக்ஜித்சிங் தல்லேவால் தலைமையில் கன்னியாகுமரியில் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கும் விவசாயிகளின் யாத்திரை சம்பந்தமாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டி: உச்சநீதிமன்றம் அமைத்த நீதியரசர் நவாப் சிங் குழுவின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படி, ​எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும். ​விவசாயிகளின் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். ​இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நோக்கம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதாகும். மேலும் ​மாநில முதலமைச்சர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில், பிப்ரவரி 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ஒரு யாத்திரை தொடங்கி காஷ்மீரில் நிறைவடைந்து, மார்ச் 19-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Tags : Farmers' march ,Union government ,Kumari ,Kashmir ,Nagercoil ,Southern ,Committee ,All Tamil Nadu Farmers' Unions ,All India United Farmers' Union ,State Coordinator ,P.R. Pandian ,Tamil ,Nadu ,President ,Ayyagannu… ,
× RELATED மணலூர்பேட்டை சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு