×

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தொல்லியல் துறை, காவல்துறை மட்டுமே முடிவெடுக்க முடியும்: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

 

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தொல்லியல் துறை, காவல் துறை மட்டுமே முடிவெடுக்க முடியும் என கருத்து தெரிவித்த ஐகோர்ட் கிளை நீதிபதிகள், சந்தனக்கூடு உத்தரவை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் கந்தூரி விழா நடத்த தடை விதிக்கக் கோரி மாணிக்க மூர்த்தி என்பவர், ஐகோர்ட் கிளையில் ஜன. 2ம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.மதி, தர்கா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவும், மலையில் கந்தூரி விழா நடத்தக்கூடாது எனவும், சந்தனக்கூடு நிகழ்வில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவிற்கு எதிராக ஓசீர்கான் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருப்பரங்குன்றம் தர்கா தரப்பில் நடைபெறும் சந்தனக்கூடு விழாவில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை பங்கேற்பர். ஆனால் தனி நீதிபதி 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். மனுதாரர் அது போன்ற கோரிக்கை எதையும் முன்வைக்காத நிலையில் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல.

எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என முடிவு செய்வதற்காக, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘ஏற்கனவே தீபத்தூணில் தீபமேற்றுவது தொடர்பான வழக்கில் மலை மேல் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்பாக காவல்துறையும், தொல்லியல் துறையுமே முடிவு செய்ய இயலும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை மீறி தனி நீதிபதி உத்தரவை பிறப்பிக்க இயலாது. அதோடு தனி நீதிபதியின் உத்தரவு இடைக்கால உத்தரவு தான். அடுத்த வழக்கு விசாரணையின்போது இந்த விபரங்களையும் தனி நீதிபதி முன்பாக வையுங்கள்’’ எனக் கூறி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றுகூறி தள்ளுபடி செய்தனர்.

 

Tags : Archaeological Department ,Thiruparankundram ,Madurai ,Court ,Sandalwood ,Kanduri festival ,
× RELATED மணலூர்பேட்டை சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு