×

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜனநாயகன் தணிக்கை சான்று வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

 

சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதி திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்சார் போர்டு தணிக்கை சான்றிதழ் வழங்காததால் படத்தை வௌியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, தணிக்கை சான்றிதழ் தரக்கோரியும், மறு ஆய்வுக்கு தடை விதிக்க கோரியும் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்சார் போர்டு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

விசாரணை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்றும் அன்று தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஜனவரி 20ம் தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, ஜனநாயகன் பட வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் 16வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

 

Tags : Court ,Supreme Court ,Chennai ,Vijay ,
× RELATED மணலூர்பேட்டை சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு