திருச்சி: தேர்தலுக்கு பின் பாஜவின் ஆட்டத்தை தடுக்க வரும் சட்டமன்ற தேர்தலில் தனது விசுவாசிகள் 100 பேருக்கே எம்எல்ஏ சீட் கொடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திமுக தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. இதேபோல் அதிமுகவும் கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில் இந்த மாத கடைசிக்குள் அதிமுக தனது கூட்டணியை இறுதி செய்ய முனைப்பு காட்டி வருகிறது. அதிமுக 150 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. இதற்காக அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணலும் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் 100 தொகுதிகளில் தனக்கு வேண்டிய நபர்கள் மற்றும் விசுவாசமாக உள்ளவர்களுக்கே சீட் வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கு பின்னரும் எப்போதும் தனது பேச்சை மீறாமல் இருக்க வேண்டும். தேர்தலுக்கு பின் பாஜவால் அரசியல் ரீதியாக தனக்கு ஏதாவது நெருக்கடி வந்தால் விலகி செல்லாமல் தன்னுடன் இருக்கும் வகையில் 100 பேரை எடப்பாடி தேர்ந்தெடுத்து வைத்துள்ளாராம்.
இதுகுறித்து, அதிமுக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘‘பாஜவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களிடம் அடிக்கடி பேசி வருகின்றனர். குறிப்பாக, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட சில மாஜி அமைச்சர்களுடன் பாஜ ஒன்றிய அமைச்சர்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றனர். ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என பாஜ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அவர்கள் வந்தால் எடப்பாடி தனது சீட்டுக்கு ஆபத்து வந்து விடும் என அஞ்சுகிறார்.
இதனால் அவர்களை சேர்க்க எடப்பாடி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். தற்போதே எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்த எஸ்.பி.வேலுமணியையே பாஜ பயன்படுத்தி வருகிறது. எஸ்.பி.வேலுமணிக்கு பின்னால் கொங்கு, மத்திய, வட மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால், எடப்பாடி தங்கள் வழிக்கு வரவில்லை என்றால் எஸ்.பி.வேலுமணி மூலம் அதிமுகவை கைப்பற்ற பாஜ மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை எப்படி செய்தார்களோ, அதுபோல் எடப்பாடியையும் பொட்டி பாம்பாக அமர வைக்க பாஜ திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதம் பெற வேண்டும் என்பதால், அனைவரிடமும் பாஜ அனுசரித்து போவது போல் பேசி வருகிறது. ஆனால், அவர்களின் உண்மையான முகம் வேறு.
இது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் கவனத்துக்கு சென்றுள்ளது. தேர்தலுக்கு பிறகு பாஜ மூலம் அதிமுகவில் ஏதாவது பிரச்னை வந்து, கட்சியை இரண்டாக உடைக்க நினைத்தால் தன்னுடைய பதவி காலியாகி விடும் என எடப்பாடி அஞ்சுகிறார். இதனால், கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் எம்எல்ஏக்கள் சீட் கொடுப்பது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மாஜி அமைச்சர்களை வைத்து வாய்ப்பு வழங்கிய எடப்பாடி, இந்த முறை மொத்த பொறுப்பையும் தனது மகனிடம் கொடுத்து உள்ளார். அவர் யார், யார் பணத்தை வாரி இறைக்கிறார்களோ மற்றும் எடப்பாடிக்கு யார் விசுவாசிகளாக இருப்பார்களோ அவர்களை தேர்ந்தெடுத்து பட்டியலை தயார் செய்து வருகிறார். பாஜவின் சதுரங்க வேட்டையை ஸ்மெல் செய்த எடப்பாடி, தேர்தலுக்கு பின் கட்சியை உடைக்க பாஜ சதி செய்தால், தனக்கென எம்எல்ஏ கூட்டத்தை வைத்து கொள்ள முடிவு செய்து விசுவாசிகளுக்கு சீட் வழங்க திட்டமிட்டுள்ளார். இதனால் வரும் தேர்தலில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்’’ என்றனர்.
