×

அடம் பிடிக்கும் பியூஷ்கோயல்; தர மறுக்கும் எடப்பாடி; அதிமுக-பாஜ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வி: மீண்டும் டெல்லி பயணம்?

திருச்சி பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக திருச்சி வந்துள்ள ஒன்றிய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார். பிரதமர் மோடி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணியளவில் விமானத்தில் திருச்சி வந்தார். பின்னர், மத்திய பேருந்து
நிலையம் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கினார். இந்நிலையில் எடப்பாடி தங்கியுள்ள ஓட்டலுக்கு பிற்பகல் 12.45 மணிக்கு வந்த ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல், அவரை சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், சிவபதி உள்பட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. பேச்சுவார்த்தையின் போது, தென் மாவட்டங்களை குறி வைத்து அதிமுகவுக்கு சாதகாமக உள்ள முக்கியமான தொகுதிகளை பியூஷ்கோயல் கேட்டுள்ளார். ஆனால், அந்த தொகுதிகளை தர முடியாது என எடப்பாடி தெரிவித்து விட்டார்.

அப்போது பியூஷ்கோயல், எங்களுக்கு மட்டும் நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுத்து விடுங்கள், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு நீங்கள் கொடுக்கும் தொகுதிகளை அவர்கள் வாங்கி கொள்ளட்டும் என கூறியதாக தெரிகிறது. இதற்கு எடப்படி பழனிசாமி, அதிமுகவின் வெற்றி தொகுதிகளை தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். நாங்கள் கொடுக்கும் தொகுதிகளை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள் எனக்கூறினார். இதையடுத்து, கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றம் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனால், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மூலம் அழுத்தம் தர பாஜ முடிவு செய்து உள்ளதால், மீண்டும் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தொகுதி பங்கீடு ெதாடர்பாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. கடந்த மார்ச் 1ம் தேதி மதுரைக்கு வருவதற்கு முன்பு பியூஷ்கோயல் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், பாஜ மேலிடம் அழைப்பை ஏற்று எடப்பாடி, டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

Tags : Piyush Goyal ,Edappadi ,AIADMK ,BJP ,Delhi ,National Democratic Alliance ,Trichy Panchapur ,Union Minister ,Tamil ,Nadu ,Trichy ,Modi ,
× RELATED சொல்லிட்டாங்க…