×

தோல்வி கன்பார்ம்; பாமக தொகுதியை பறிக்கும் இலை சிட்டிங் எம்எல்ஏ

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் தொகுதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கார்த்திகேயனை விட 862 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார். தற்போது, மீண்டும் 2026 தேர்தலுக்கு விருத்தாசலத்தை காங்கிரசுக்கு கேட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் திமுக கூட்டணியில், தேமுதிக இணைந்திருப்பதால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் விருத்தாசலத்தில் போட்டியிட முனைப்பு காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் முதன்முதலாக போட்டிட்டு வென்ற தொகுதி என்பதால், இந்த முறை வெற்றி கிடைக்கும் என நம்புகிறார்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியடைந்த கார்த்திகேயனுக்கு மீண்டும் சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாமகவினர் முழு முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால், அதிமுகவின் மேற்கு மாவட்ட செயலாளரும், தற்போது புவனகிரி எம்எல்ஏவாக உள்ள அருண்மொழித்தேவன் விருத்தாசலத்தில் போட்டியிடுவதற்கு, தலைமையிடம் சீட்டு கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே வெற்றிப்பெற்ற புவனகிரி தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகன் கதிரவன் போட்டியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறார். மேலும் புவனகிரி தொகுதியில் மக்களை சந்தித்து திமுக சாதனைகளை கூறி களப்பணியாற்றுகிறார். இது போன்ற சூழலில், புவனகிரி தொகுதியில் இந்த முறை போட்டியிட்டால் தோல்வி உறுதி என கருதி, விருத்தாசலம் தொகுதியை அருண்மொழித்தேவன் அதிமுக தலைமையிடம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

விருத்தாசலத்தைக் கேட்டு பெற்றாலும் கூட கார்த்திகேயனுக்கு சீட்டு கிடைக்காத விரக்தியில் பாமகவினர் அருண்மொழித்தேவனுக்கு வாக்களிப்பது கேள்விக்குறிதான். ஏற்கனவே தோல்வி அடைந்ததால் மீண்டும் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கையில் கார்த்திகேயன் பொதுமக்களை கடந்த ஐந்தாண்டு காலமாக சந்தித்து வருகிறார். தொகுதி மாறும் அதிமுக எம்எல்ஏ மீது பாமகவினர் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். பாமகவுக்கு சீட்டு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பாமகவினர் உள்ளடி வேலை செய்து தோற்கடித்து விடுவார்கள் என்ற பயமும் அதிமுகவினருக்கு இருக்கிறது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் அருண்மொழித்தேவன் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.

Tags : MLA ,PMK ,Virudhachalam ,Cuddalore district ,Congress party ,Radhakrishnan ,DMK ,Karthikeyan ,
× RELATED சொல்லிட்டாங்க…