×

ராணிப்பேட்டையில் சவுமியா போட்டி? ஆற்காடு தொகுதியையும் கேட்கும் அன்புமணி

 

ராணிப்பேட்டை: தமிழகத்தில் தேர்தல் களத்தில் அதிமுக, பாமக, பாஜ கூட்டணி உறுதியாகியுள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 17 தொகுதிகள் வரை ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக சார்பில் பாமகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என உறுதியாக தெரிவிக்கவில்லை. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய நான்கு தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் அரக்கோணம் தொகுதி கூட்டணி கட்சியான விசிகவிற்கும், சோளிங்கர் தொகுதி காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டது. ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதிகளில் திமுகவும் சோளிங்கரில் காங்கிரசும் வெற்றி பெற்றது. அரக்கோணத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் தோல்வி அடைந்த எஸ்.எம்.சுகுமார் கவனம் முழுவதும் ஆற்காடு தொகுதிக்கு சென்றது. ஏனென்றால் ராணிப்பேட்டையை பொறுத்தவரை 3 நகராட்சியும், 1 பேரூராட்சி, ஒரு ஒன்றியமும் அடங்குகிறது. ராணிப்பேட்டையை பொறுத்தவரை மேல்விஷாரம் நகராட்சியை சேர்ந்த மக்கள் ஓட்டே வெற்றியை நிர்ணயிக்கிறது. இதனால்தான் சுகுமார் அதிகளவில் ஆற்காடு தொகுதியிலேயே பல நிகழ்ச்சிகளிலும், கட்சி பணிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போது ஆற்காடு தொகுதியில் நிற்க விரும்புகிறேன் என சுகுமார் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விருப்ப மனுவின்போது ராணிப்பேட்டை தொகுதிக்கு மனு கொடுத்துள்ளார்.

அதிமுக, பாமக கூட்டணி உறுதியானதை தொடர்ந்து பாமகவினர் மத்தியில் சவுமியா அன்புமணி ராணிப்பேட்டை தொகுதியில் நிற்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். அதோடு ஆற்காடு தொகுதியையும் பாமகவினர் கேட்பதாக பேசப்பட்டு வருகிறது. எப்படியும் 2 தொகுதிகளும் நமக்கு கிடைத்துவிடும் என பாமகவினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதேபோல் அதிமுக சார்பில் ஏற்கனவே ராணிப்பேட்டை தொகுதிக்கு சுகுமார் விருப்ப மனு அளித்துள்ளார் என்ற பேச்சு இருக்கும் நிலையில், ராணிப்பேட்டை, ஆற்காடு என 2 சட்டமன்ற தொகுதிகளையும் சேலத்துக்காரர் சொந்த கட்சிக்காரங்களுக்கு ஒதுக்குவாரா? கூட்டணிக்கு கொடுத்துடுவாரான்னு தெரியாம 2 தொகுதி கட்சி நிர்வாகிகளும் குழப்பத்துடனும், கலக்கத்துடனும் இருக்குறாங்களாம்.

 

Tags : Soumya ,Ranipet ,Anbumani ,Arcot ,AIADMK ,PMK ,BJP alliance ,Tamil Nadu ,AIADMK alliance ,AIADMK… ,
× RELATED தமிழ்நாடு காங். கமிட்டி மாநில...