டெல்லி: பாஜவின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் (46), ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர் என்பதுடன் தற்போது பாஜகவின் தேசிய செயல் தலைவராகவும் கடந்த சில வாரங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். ஒன்றிய அமைச்சரான ஜே.பி. நட்டாவுக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள இவருக்கு, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் முழு ஆதரவு உள்ளது. இவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பாஜக வரலாற்றிலேயே மிக இளைய வயதில் தேசியத் தலைவர் பதவியை அலங்கரிக்கும் நபர் என்ற பெருமையைப் பெறுவார்.
கட்சியின் மூத்த தலைவர்கள் இவரை முன்மொழியவுள்ளதால், இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் தொடங்கியது. தேர்தல் அதிகாரி கே.லட்சுமணன் வெளியிட்ட கால அட்டவணைப்படி, இன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் புதிய தேசியத் தலைவராக நிதின் நபினுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நட்டா உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். டில்லி முதல்வர் ரேகா குப்தா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் தமி உள்ளிட்ட பல்வேறு பாஜ ஆளும் மாநில முதல்வர்கள் நிதின் நபினுக்கு ஆதரவாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.
காலக்கெடு இன்றுடன் முடிந்த நிலையில், புதிய தேசியத் தலைவர் பதவிக்கு நிதின் நபினைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என தேர்தல் நடத்தும் அதிகாரி லட்சுமணன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நிதின் நபின் பாஜவின் புதிய தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்வு ஆகியுள்ளார். பாஜக தேசியத் தலைவராக நிதின் நபீன் நாளை(ஜன.20) பொறுப்பேற்கிறார்.
