×

மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் ஆண்களுக்கும் இலவச பஸ்: அதிமுக தேர்தல் வாக்குறுதி; 2011ல் ஜெயலலிதா அறிவித்த அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி இதுவரை நிறைவேற்றவில்லை என மக்கள் கருத்து

சென்னை: மகளிருக்கு வழங்கப்படுவதுபோல் ஆண்களுக்கும் நகர பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிமுக முதல்கட்ட தேர்தல் வாக்குறுதியாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுக சார்பில் அளிக்கப்படும் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்:
1. மகளிர் நலன்: (குல விளக்கு திட்டம்) குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம்: நகர பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும், நகர பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
3. அனைவருக்கும் வீடு: (அம்மா இல்லம் திட்டம்) `அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகர பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி `அம்மா இல்லம் திட்டம்’ மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
4. 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
5. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்: மகளிருக்கு ரூ.25,000 மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* சொன்னார்கள்.. செய்தார்களா..?
2011ம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில், அதிமுக ஆட்சிக்கு வந்தால், 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா முதல்வர் ஆனார். ஆனால் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் சுமார் நான்கரை ஆண்டுகளாக செயல்படுத்தவில்லை. இறுதியாக 2016ம் ஆண்டு மீண்டும் சட்டப்பேரவை வருவதற்கு 2 மாதங்களுக்கு முன் அதாவது, 24.2.2016 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

இதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். இதற்கென ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் மட்டுமே இலவசமாக பயண திட்டத்திற்காக வழங்கப்பட்டது. சென்னையை தவிர மற்ற ஊர்களில் வெளியூர்களில் இந்த திட்டம் 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தவரை செயல்படுத்தப்படவில்லை. அதேநேரம், திமுக 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடனே பெண்களுக்கான விடியல் பயணம் என்ற பெயரில் மாநகர பஸ்களில் அனைத்து பெண்களுக்கும் வயது வித்தியாசம் இல்லாமல் கட்டணமில்லா பயண திட்டத்தை முதல்வர் அறிவித்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார்.

Tags : AIADMK ,Edappadi Palaniswami ,Jayalalithaa ,Chennai ,General Secretary ,Edappadi Palaniswami… ,
× RELATED தமிழ்நாட்டுக்கு 23ம்தேதி வருகை தே.ஜ....