சென்னை: சட்டப்படிப்பு முடித்தவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்ய பதிவு மற்றும் அதிகாரம் வழங்குவது அந்தந்த மாநில பார்கவுன்சிலுக்கு தரப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இதற்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். ஆனால் பல மாநிலங்களில் பார்கவுன்சில் தேர்தல் நடத்தப்படாத நிலை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் பதவிக்காலம் முடிவடைந்து ஓராண்டுக்கும் மேலாகியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் எம்.வரதன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தேர்தல் நடத்தப்படாத மாநிலங்களில் பார்கவுன்சில் தேர்தலை நடத்த கோரியிருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் மாதவி திவான், வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படாத அனைத்து மாநில பார் கவுன்சில்களின் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில், தகுதி தேர்வு தொடர்பான பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இதையடுத்து, ஏப்ரல் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற இமாச்சலபிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜிவ் சக்தர், உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், வழக்கறிஞர் அமித் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய உயர் மட்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தல் தேதி, ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நீதிபதி ராஜிவ் சக்தர் தலைமையிலான உயர் மட்ட குழு இன்று (ஜன. 18) தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளது.
இதற்கான அறிவிப்பை உயர் மட்ட குழு தமிழ்நாடு பார்கவுன்சில் செயலாளருக்கு நேற்று அனுப்பியுள்ளது. தமிழ்நாடு பார்கவுன்சில் கட்டிடத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் ஏப்ரலுக்குள் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியகூறுகள் உள்ளதாக வழக்கறிஞர்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஏற்கனவே, பல வழக்கறிஞர்கள் பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சமூக வலைதளங்களில் பிரசாரத்தை தொடங்கியுள்ளதும் இந்த தேர்தலில் 5 பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
