இந்தூர்: இந்தூரில் இன்று நடக்கும் இந்தியா-நியூசிலாந்து கடைசி ஒருநாள் போட்டி, கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கிறது. இதில் ரோ-கோ காம்போ சாதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 5 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. வதோதராவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில், இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில், நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.
1-1 என தொடர் சமனில் இருக்கும் நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது. இந்திய அணியின் பேட்டிங்கில் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர். இதில், ரோ-கோ காம்போ கலக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஆனால் பவுலிங் தான் எதிர்பார்த்த அளவு இல்லை. முகமது சிராஜ் நன்றாக பந்து வீசினாலும், பிரசித் கிருஷ்ணா ரன்களை வாரி இறைக்கிறார். அதனால், இன்று அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்படலாம். சுழலிலும் குல்தீப்யாதவ் பெரிதாக சாதிக்கவில்லை.
அதே போல், நிதிஷ்குமார் ரெட்டி 2வது போட்டியில் சோபிக்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி இன்று களமிறங்க வாய்ப்புள்ளது. நியூசிலாந்து அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் வலுவாக உள்ளது. பேட்டிங்கில் டேரில் மிட்செல், கான்வே, ஹென்றி நிக்கோலஸ், கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல், பிலிப்ஸ் ஆகியோர் இந்திய பவுலர்களுக்கு நெருக்கடி அளிப்பர். பவுலிங்கில் ஜேமீசன், கிறிஸ்டியன் கிளார்க் பார்மில் உள்ளனர். இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால், வெற்றியுடன் கோப்பையை வெல்ல போவது யார்? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு ராசியான மைதானம். இங்கு ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததே கிடையாது. இதுவரை 7 போட்டிகளில் ஆடி அனைத்திலும் வென்றுள்ளது. இதனை இன்றும் தக்க வைக்க வைக்க இந்திய வீரர்கள் மல்லுகட்டுவார்கள். நியூசிலாந்து இங்கு 2023 ஜனவரி 24ம் தேதி இந்தியாவுக்கு எதிராக 90 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா 2011ல் 418/5 ரன் குவித்தது தான் அதிகபட்சமாகும். கேப்டன் சுப்மன்கில் இம்மைதானத்தில் இதற்கு முன் ஆடிய 2 போட்டியிலும் சதம் அடித்துள்ளார். இந்திய நேரப்படி இன்று(18ம் தேதி) மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
* இதுவரை நேருக்கு நேர்…
இந்தியா-நியூசிலாந்து இன்று 123வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. இதற்கு முன் மோதிய 122 போட்டிகளில் இந்தியா 63, நியூசிலாந்து 51ல் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 7 போட்டி ரத்தாகி இருக்கிறது. கடைசியாக மோதிய 9 போட்டியில் இந்தியா 8ல் வென்றுள்ளது.
