×

இது குமரி கணக்கு: எனக்கு 5 உனக்கு 1; டெல்லி முடிவால் எடப்பாடி ஷாக்

நாகர்கோவில்: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தனது வலுவான கோட்டையான கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் 5 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட பாஜ ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த 2021 தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாஜ 3 இடங்களில் அதாவது நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது 2026 தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் நீடித்தாலும் அல்லது புதிய கூட்டணி அமைத்தாலும், மாவட்டத்தில் தனது வாக்கு வங்கி அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி 5 இடங்களைக் கோர பாஜ திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக நாகர்கோவில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம், குளச்சல் மற்றும் விளவங்கோடு ஆகிய தொகுதிகளைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது. தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 4வது வாரத்தில் கன்னியாகுமரியில் ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றத் திட்டமிட்டுள்ளார். இது மாவட்டத்தில் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதோடு, ஐந்து தொகுதிகளில் போட்டியிடுவதற்கான கட்சியின் பிடியையும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாகர்கோவில் தொகுதியில் 2021ல் பாஜ சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.காந்தி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக 2ம் இடம் பிடித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் இந்தத் தொகுதியில் பாஜ முன்னிலை பெற்றிருந்தது. 2026ல் மீண்டும் இத்தொகுதியைத் தக்கவைத்துக்கொள்வதில் பாஜ உறுதியாக உள்ளது. கன்னியாகுமரி அதிமுக மற்றும் திமுகவிற்கு இணையாக வலுவான வாக்கு வங்கியை வைத்துள்ளதாக பாஜ கூறுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக இங்கு வென்றது. தளவாய்சுந்தரம் எம்எல்ஏ ஆனார். இங்கும் திமுக 2ம் இடத்தை பெற்றிருந்தது. 2026ல் இத்தொகுதியையும் தட்டிப்பறிக்க பாஜ திட்டமிட்டுள்ளது.

பத்மநாபபுரம் திமுகவிற்கு செல்வாக்கு பெற்ற தொகுதி. இங்கு வெற்றிபெற்ற மனோ தங்கராஜ் அமைச்சரானார். தமிழ்நாட்டில் 1996ல் பாஜவின் வெற்றிக்கு அடித்தளம் இட்ட தொகுதியாக இருந்தாலும் அதன் பிறகு இங்கு பாஜ இதுவரை எழவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வலுவான போட்டியை அளித்து வருகிறது. 2024 இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் தரவுகளின்படி, இத்தொகுதியில் பாஜவின் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறும் பாஜ 2026-ல் போட்டியிட விரும்பும் 5 தொகுதிகள் பட்டியலில் இதுவும் ஒன்றாக உள்ளது.

கடற்கரை கிராமங்களை அதிகம் கொண்ட குளச்சல் தொகுதியில் காங்கிரஸ், திமுக, அதிமுக பாரம்பரியமாக வலுவாக உள்ளது. இருப்பினும், உள் பகுதிகளில் பாஜவிற்கு அதிக ஆதரவு உள்ளது. கடந்த தேர்தலில் பாஜ இங்கு இரண்டாம் இடத்தைப் பிடித்தது. கடலோர கிராமங்களில் உள்ள வாக்குகளில் ஒரு பகுதியை ஈர்க்க முடிந்தால் இங்கு வெற்றி பெற முடியும் என கணக்கு போடும் பாஜ இங்கும் போட்டியிட ஆர்வத்தில் உள்ளது. விளவங்கோடு, கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்து பின்னர் காங்கிரசின் கோட்டையாக மாறிய தொகுதி. இங்கு, முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி 3 முறை காங்கிரஸ் கட்சியில் வென்ற நிலையில் பாஜவில் இணைந்தார்.

2024 இடைத்தேர்தலில் பாஜ இங்கு இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 2026 தேர்தலில், பாஜ போட்டியிட விரும்பும் தொகுதி இது ஆகும். கிள்ளியூர், மாவட்டத்திலேயே பாஜவிற்கு சவாலான தொகுதியாகும். இங்கு சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் என்பதால், பாஜ பெரும்பாலும் மூன்றாம் இடத்தையே பிடித்து வருகிறது. எனவேதான், 6 தொகுதிகளில் 5-ல் மட்டும் கவனம் செலுத்தி, கிள்ளியூர் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க பாஜ முன் வர வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இங்கு அதிமுகவின் அமைப்பு ரீதியான பலம் மற்றும் குறிப்பிட்ட சமூக வாக்குகளின் ஒருங்கிணைப்பு கட்சிக்குச் சாதகமாக உள்ளது.

பத்மநாபபுரத்தில் அதிமுக ஒரு முக்கிய சக்தியாக உள்ளது. நாகர்கோவில் பாஜவின் வலுவான கோட்டையாக இருந்தாலும், அதிமுக இங்கு இரண்டாவது அல்லது மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. நகர்ப்புற வாக்குகளும், பாரம்பரிய வாக்குகளும் இங்கு அதிமுகவின் செல்வாக்கை உறுதிப்படுத்துகின்றன. கன்னியாகுமரி, பத்மநாபபுரம் மற்றும் நாகர்கோவில் தொகுதிகளில் அதிமுகவிற்கு நல்ல வாக்கு வங்கி உள்ளது எனவே அதிமுகவிற்கு தர வேண்டும் என்பது அக்கட்சியின் விருப்பம். அதிமுக கூட்டணியில் தொகுதிகளை முடிவு செய்யும் இடமாக ‘டெல்லி’ இருப்பதால் இந்த முறை கிடைத்ததை வாங்கிக்கொண்டு போட்டி போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுமோ என்று எடப்பாடி மற்றும் அதிமுகவினர் மத்தியில் அச்சம் உள்ளது. அதனால் குமரி மாவட்டத்தில் அதிமுக போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை கணிசமாக குறையும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளது. இது அதிமுகவினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Tags : Kumari ,Edappadi ,Delhi ,Nagercoil ,2026 assembly elections ,Tamil Nadu ,BJP ,Kanyakumari ,AIADMK ,
× RELATED தமிழ்நாட்டுக்கு 23ம்தேதி வருகை தே.ஜ....