திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக சார்பில், சமத்துவ பொங்கல், மாட்டுப் பொங்கல் விழா கே.வி.கே. குப்பம் மீனவ கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமை வகித்தார். கிராமத்தின் கோயிலான படவேட்டம்மன் ஆலய வாசல் முன்பு ஏராளமான பெண்கள் செங்கரும்புடன் 3 பானைகளில் புத்தரிசியுடன் பொங்கல் வைத்து, ‘‘பொங்கலோ பொங்கல்’’ என கோஷங்கள் எழுப்பி சூரியனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.
இதன்பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பாரம்பரிய நிகழ்வான மீனவ பெண்கள் நடனமாடி பாரம்பரிய கும்மி பாட்டு பாடினர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் முதியோர், பெண்கள் என சுமார் 3 ஆயிரம் பேருக்கு அரிசி, மளிகை பொருட்களுடன் கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு, ரொக்க பணம், மற்றும் சுய தொழில் செய்ய தள்ளுவண்டி ஆகிய உதவிகளை கே.பி.சங்கர் எம்எல்ஏ வழங்கினார். இதில், திருவொற்றியூர் தொகுதி முழுவதும் இருந்து திமுகவினர், மீனவர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
