திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் தேவி பூதேவி சமேதராய் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் இந்தாண்டுக்கான தை பிரமோற்சவம் கடந்த 15ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரமோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா வருகிறார். கடந்த 15ம்தேதி காலை 7.30 மணியளவில் தங்க சப்பரம் புறப்பாடும் இரவு 7மணியளவில் சிம்மவாகனமும் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.
நேற்று காலை 7.30 மணியளவில் ஹம்ச வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் காலை 10 மணியளவில் திருமஞ்சனமும் இரவு 7 மணியளவில் சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.
இன்று காலை 5 மணி அளவில் கோபுர தரிசனம் நடைபெற்றது. காலை 8 மணி அளவில் கருட சேவை உற்சவ நடைபெற்றது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அப்போது ஏராளமான பக்தர்கள், ‘’கோவிந்தா கோவிந்தா’’ என கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். இதையடுத்து இன்று இரவு 8 மணியளவில் ஹனுமந்த வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. தை மாத பிரமோற்சவ ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் பி.என்.கே.ரங்கநாதன், விழா குழுவினர் செய்துள்ளனர்.
