சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்- பாஷ் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று 37வது போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணியும், சிட்னி சிக்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. சிட்னி தண்டர்ஸ் அணியின் ஓப்பனராக இறங்கிய மேத்யூ கீல்ஸ் 12 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சாம் கோன்ஸ்டாஸ் 6 ரன், பில்லிங்ஸ் 14 ரன், மேடிசன் 26, டேனியல் சாம்ஸ் 10 ரன்னிலும், கிரிஸ் கீரின் டக் அவுட்டும் ஆகினர்.
அதேநேரம் மறுபுறம் மற்றொரு ஓப்பனராக இறங்கிய கேப்டன் வார்னர் அதிரடியாக விளையாடி 65 பந்தில் 110 ரன்கள் (11 போர், 4 சிக்ஸ்) எடுத்து இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இறுதியாக சிட்னி தண்டர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. சிட்னி சிக்சர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக சாம் கரன் 3 விக்கெட்டும், ஸ்டார்க், எட்வர்ட்ஸ், பென் மேனேன்டி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
அடுத்து 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் ஓப்பனராக இறங்கிய பாபர் அசாம் தனது பங்கிற்கு 47 ரன் எடுத்து அவுட் ஆகினார். மற்றொரு ஓப்பனராக இறங்கிய ஸ்டீவ் ஸ்மித் ருத்ர தாண்டவமாடி 42 பந்தில் 100 ரன்கள் (5 போர், 9 சிக்ஸ்) எடுத்து அவுட் ஆகினார். லோசான் ஷா 13 ரன், எட்வர்ட்ஸ் 17 ரன்னுடன் களத்தில் நிற்க சிட்னி சிக்சர்ஸ் அணி 17.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது ஸ்டீவ் ஸ்மித்திற்கு வழங்கப்பட்டது.
