- பாஜக
- புதுச்சேரி
- பிற்பகல்
- ரங்கசாமி
- N. ஆர்.
- காங்கிரஸ்
- எல்ஜ்கே
- NR காங்கிரஸ்
- பாஜா
- தேஜா கூட்டணி அமைச்ச
- முதல் அமைச்சர்
- ரங்கசாமி
- ஐரோப்பிய ஒன்றிய
புதுச்சேரி: புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேஜ கூட்டணி அமைச்சரவையில் 2 கட்சிகளின் பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர். ஆனால், ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் புதுச்சேரி மாநிலம் உள்ளதால், எந்த ஒரு திட்டத்தையும் முதல்வர் ரங்கசாமியால் நேரடியாக செயல்படுத்த முடியாது.
ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவர் அனுமதி வழங்கினால் மட்டுமே முதல்வர் ரங்கசாமியால் திட்டத்தை செயல்படுத்த முடியும். இதனால் முதல்வர், ஆளுநர் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அப்படியே ஆளுநர் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தாலும், ஒன்றிய அரசின் நேரடி பார்வையில் உள்ள அதிகாரிகள், முதல்வருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இதை ஒரு நிகழ்ச்சியில் கண்ணீர் வராத குறையாக முதல்வர் ரங்கசாமி கொட்டித்தீர்த்தார்.
2026 சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் ஏற்கனவே அறிவித்த திட்டங்களை செயல்படுத்த அரசு உயர் அதிகாரிகளின் முட்டுக்கட்டை, மோசமான நிதி நிலைமையால் சிக்கல் எழுந்தது. இதனால் பாஜ மீது கடும் அதிருப்தியில் இருந்த முதல்வர் ரங்கசாமியை, சில ஒன்றிய அமைச்சர்கள், அக்கட்சியின் மேலிட தலைவர்கள் சந்தித்து சமாதான முயற்சிகளை முன்னெடுத்தனர். இருப்பினும் நிர்வாக ரீதியாக கவர்னர், முதல்வர் இடையே இலைமறை காயாக மோதல் நீடித்தபடியே உள்ளது.
முதல்வர் தரப்பில் அனுப்பப்பட்ட பல்வேறு கோப்புகளுக்கு, விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பப்பட அதிருப்தியின் உச்சத்திற்கு தள்ளப்பட்டார் முதல்வர் ரங்கசாமி. இதனால் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவுக்கு ரங்கசாமி வந்தார். ஆனால், என்ஆர் காங்கிரசை கூட்டணியில் வைத்துக்கொண்டே ஆட்சி அரியணையில் அமர வேண்டுமென்பதே தாமரையின் அரசியல் கணக்காக இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ 60 தொகுதிகள் வரை கேட்டு மிரட்டி வருகிறது. அதேபோல், கூட்டணியில் புதிய கட்சிகளை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று கெடு விதித்து உள்ளதால், அதிமுக தலைமை ஆட்டம் கண்டுள்ளது. இந்த பார்முலாவை புதுச்சேரியிலும் செயல்படுத்தி, புதிய கட்சிகளை தேஜ கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை பாஜ டெல்லி மேலிடம் மேற்கொண்டுள்ளது.
முதல்வர் ரங்கசாமியிடம் பாஜ தலைவர்கள், இந்த கூட்டணி தொடர வேண்டும் என பேசி உள்ளனர். அப்போது அவர், சார்லஸ் மார்ட்டின் என் மீதும், அரசு மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து மக்களிடம் நம்பிக்கை இழக்க வைக்கிறார். அவர் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லிக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோரை அழைத்து, ‘புதுச்சேரியில் தொடங்கி உள்ள லட்சிய ஜனநாயக கட்சியை, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் கட்சியை கலைத்து விடுங்கள். உங்கள் கட்சிக்கு 2 அல்லது 3 சீட் வழங்குகிறோம். இதை மீறி செயல்பட்டால் லாட்டரி தொடர்பான வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்படும்’ என கடுமையான குரலில் அமித்ஷா எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதற்கு சார்லஸ் சம்மதம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, புதுச்சேரி திரும்பிய சார்லஸ், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசியுள்ளார். இதேபோல் தவெகவையும் கூட்டணியில் இணைக்க நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடுத்த மாதம் புதுச்சேரி வரவுள்ளதாக பாஜ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்போது புதுச்சேரி வளர்ச்சிக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்து, புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்கள். அதற்கு முன்பாக தேஜ கூட்டணியை இறுதி செய்ய பாஜ காய் நகர்த்தி வருகிறது. தமிழகத்தில் அறிவித்ததுபோல், புதுச்சேரியிலும் ரூ.3000 பொங்கல் பரிசு வழங்க திட்டமிட்டு முதல்வர் ரங்கசாமி, ஆளுநரின் அனுமதிக்காக கோப்புகளை அனுப்பினார்.
ஆனால், ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். தங்களுடன் கூட்டணியை இறுதி செய்தால்தான் பொங்கல் பரிசு கோப்புக்கு ஒப்புதல் தருவோம் என்று பாஜ மேலிடம் மிரட்டியதாக கூறப்படுகிறது. தேர்தல் நெருங்குவதால், பொங்கல் பரிசு வழங்கினால்தான் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று எண்ணி பாஜ மிரட்டலுக்கு ரங்கசாமி அடிபணிந்தார். இதையடுத்தே, போகி பண்டிகை அன்று கடைசி நேரத்தில் புதுச்சேரி மக்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் மிரட்டியே கூட்டணியை உறுதி செய்து வரும் பாஜ, புதுச்சேரியிலும் தனது பலே பார்முலாவை விட்டு வைக்கவில்லை.
