சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 100 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை அன்று, கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு பொங்கல் பண்டிகைையொட்டி, முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பலர் வாழ்த்துக்களை பெற்றனர். அதன்படி, முதல்வரிடம் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் சபாநாயகர் அப்பாவு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, தா.மோ.அன்பரசன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆவடி நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம், ஜெ.கருணாநிதி உள்ளிட்ட எம்எல்ஏக்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மூத்த தலைவர் முத்தரசன், திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன் குமார், திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி, திமுக மாற்று திறனாளிகள் அணி தலைவர் ரெ.தங்கம், எஸ்ஆர்எம்யூ பொது செயலாளர் என்.கண்ணையா, நல்லி குப்புசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
