ராஜ்கோட்: நியூசிலாந்துக்கு எதிரான 2வதுவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. கோஹ்லி, ரோஹித், ஸ்ரேயாஸ் ஏமாற்றமளிக்க பொறுப்புடன் பேட்டிங் ஆடி சதம் அடித்த கே.எல்.ராகுல் 112 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது. 285 ரன் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 50 ரன்கள் எடுப்பதிற்குள்ளேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதை தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த யங் மற்றும் மிட்செல் ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்து 162 ரன்கள் சேர்த்தது. யங் 87 ரன்களும், மிட்செல் 131 ரன்களும் குவிக்க நியூசிலாந்து அணி 47.3வது ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 286 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருப்பதால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. வெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் கூறுகையில், எங்கள் அணியை நினைத்தால் பெருமையாக உள்ளது.
போட்டியின்போது அணி வீரர்கள் தங்களது முழு செயல்பாட்டை வழங்கினார்கள். எங்கள் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்ததோடு குறிப்பிட்ட இலக்கிற்குள் கட்டுப்படுத்தினார்கள். மிட்செல் மற்றும் யங்கிற்கு இந்த வெற்றியில் பெரும் பங்கு உள்ளது. உலகின் சிறந்த அணிக்கு எதிராக, அதன் சொந்த மண்ணில் அபாரமாக விளையாடியது பெருமைக்குரியது. இந்தியா போன்ற நாடுகளில் தனது முதல் போட்டியில் விளையாடுவது எளிதான காரியமில்லை. எனினும் நெருக்கடியான சூழலில் ஜேடன் சிறப்பாக பந்து வீசினார். கிளார்க்கும் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். இதுவரை இந்திய மண்ணில் நாங்கள் ஒருநாள் தொடரை வென்றதில்லை. எனவே 3வது போட்டியிலும் வென்று தொடரை வெல்ல முயற்சிப்போம். இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து இந்திய அணி கேப்டன் கில் கூறுகையில்,‘‘ தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை எடுக்க தவறிவிட்டோம்.
பவர் பிளயில் அதிக விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை எனில், நிச்சயம் போட்டி கடினமானதாக மாறிவிடும். நாங்கள் கூடுதலாக ஒரு 20 ரன்கள் அடித்திருக்க வேண்டும். மிட்செல் அபாரமாக பேட்டிங் ஆடினார். இக்கட்டான சூழலில் களமிறங்கி கே.எல் ராகுல் சதம் அடித்தது பாராட்டுதலுக்குறியது. நாங்கள் பேட்டிங் செய்தபோது முதல் 10, 15 ஓவர்களில் கொஞ்சம் நெருக்கடியாக அமைந்தது. எங்கள் பீல்டிங்கில் கொஞ்சம் முன்னேற்றம் தேவை. நிச்சயம் அடுத்த போட்டியில் தவறுகளை திருத்தி வெற்றி பெற முயற்சிப்போம் என்றார். தொடரை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்தூரில் நடக்கிறது.
