* முதல் பரிசுபெற்ற வீரருக்கு கார் பரிசு l 58 பேர் காயம்
அவனியாபுரம் : மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் 564 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 22 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பாலமுருகனுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. போட்டியில் வீரர்கள், பார்வையாளர்கள் உட்பட 58 பேர் காயம் அடைந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. தை முதல் நாளான தைப்பொங்கலன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடத்தப்படும். இதன்படி நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. போட்டிகள் காலை 7:20 மணிக்கு துவங்கியது. மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் அமைச்சர் மூர்த்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற்றது. ஜல்லிக்கட்டை மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி சார்பில் ரூ.67 லட்சத்திற்கான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் ஆன்லைன் மூலம் பதியப்பட்டு அவர்களுக்கு ஆன்லைன் மூலம் டோக்கன் தரப்பட்டது. அவனியாபுரத்தில். 1,100 காளைகள், 960 மாடு பிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இவற்றில் 939 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 564 வீரர்கள் பங்கேற்றனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நான்கு துணை ஆணையர்கள், 8 உதவி ஆணையாளர்கள், 56 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,100 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் ஒவ்வொரு சுற்றிலும் பங்கேற்ற மாடுகள், மற்றும் மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை எல்இடி திரை மூலம் ஸ்கோர் கார்டு காட்டப்பட்டது. குடிநீர், தற்காலிக கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சாலையின் இரு மருங்கிலும் இரண்டு அடுக்கு 8 அடி உயர சவுக்கு கம்புகள் அதன் மேல் இரும்பு தடுப்பு , மற்றும் இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.சிறந்த காளைக்கான முதல் பரிசாக டிராக்டர் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் ராம்குமார், உதவி இயக்குநர் சுரேஷ் தாசன் தலைமையில் 10 குழுவினர் காளைகளை பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களுக்கு மதுரை மாநகராட்சி தலைமை மருத்துவ அதிகாரி பார்த்திபன் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என மொத்தம் 240 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருந்து காயம் பட்டவர்களை மீட்டனர்.
12 ஆம்புலன்ஸ், 2 பைக் ஆம்புலன்ஸ், செஞ்சிலுவை சங்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டை ஒட்டி அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் சாலையில் செல்லும் வாகனங்கள் வெள்ளக்கல் வழியாக திருப்பரங்குன்றம் மற்றும் முத்துப்பட்டி மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
நேற்றைய போட்டியில் சிறந்த காளைக்கான முதல் பரிசு அவனியாபுரம் விருமாண்டி சகோதரர்களின் காளை பெற்றது. இவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக டிராக்டர் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2வது பரிசாக ஜிஆர்.கார்த்திக் காளைக்கு தங்கக்காசு பரிசாக கிடைத்தது. மாடுபிடி வீரர்களில் வலையங்குளம் பாலமுருகன் 22 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்திக்கிற்கு 2வது பரிசாக அமைச்சர் மூர்த்தி சார்பில் பைக் வழங்கப்பட்டது. போட்டியில் காயம் 58 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் மாடுபிடி வீரர்கள் 26 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
