திருவாரூர்: திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் பெருந்தருக்குடி ஊராட்சிக்குட்பட்ட குளிக்கரை கிராமமானது திருவாரூர்-மன்னார்குடி மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஜல் ஜீவன் திட்டம், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய குடிநீர் திட்டங்களுக்காக குழாய் பதிக்கும் பணிகளுக்காக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த பணிகள் காரணமாக சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளன. தற்போது மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இந்த சாலை சேரும் சகதியுமாக மாறி மக்கள் நடமாட முடியாதபடி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், வயதானவர்களும், பொதுமக்கள், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்து வருவதால் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
