இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மொழிகளும் இன்று உயிர்ப்புடன் இருக்க, தமிழ்நாட்டில் மூன்று கட்டங்களாக நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்தான் காரணம். அதேபோல் யுனெஸ்கோ அறிவித்து உலகம் முழுக்க கொண்டாடும் ‘உலக தாய்மொழி தின’த்துக்கும் தமிழ்நாட்டில் முதன்முதலில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கும் தொடர்பு இருக்கிறது.
மொழிப் போராட்டம் என்பதும், மொழிக்காகக் குரல் கொடுப்பது என்பதும் உலக அளவில் பல நாடுகளிலும் நடந்திருக்கிறது. இது சர்வதேச பிரச்னை. உலகளவில் தத்தம் மொழிக்காக குரல் கொடுப்பது ஆதிக்கத்துக்கு எதிரான வடிவமாக இருந்திருக்கிறது; இருக்கிறது. எல்லா மொழிப் போராட்டத்தின் ஆணிவேரும் ஒன்றுதான். அது, ‘வலுக்கட்டாயமாக பிற மொழிகளை எங்கள் மீது திணிக்காதீர்கள்’ என்பதுதான்.
உதாரணமாக, இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் கிறிஸ்துவப் பாதிரியாராக வேண்டுமென்றால் லத்தீன் மொழியில்தான் பைபிளைப் படிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இதை மாற்றியவர் இங்கிலாந்தை சேர்ந்த ஜான் விக்ளிப் என்பவர், ‘எனது தாய்மொழியான ஆங்கிலத்தில்தான் பைபிளைப் படிப்பேன்’ என்று குரல் கொடுத்தார். இதற்காக சாட்டையால் பலமுறை அடி வாங்கி நோய் முற்றி மரணமடைந்தார்.
சில ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அவர் படம் திறக்கப்பட்டு ‘தாய் மொழிக்காக உயிர் நீத்த தனயன்’ என்று அவர் போற்றப்பட்டார். அதேபோல் செக்கஸ்லோவியா நாட்டில் ‘பைபிளை என்னுடைய தாய்மொழியான செக் மொழியில்தான் படிப்பேன்’ என்று முழக்கமிட்ட ஜான்கஸ் என்பவர் எரித்து கொல்லப்பட்டார். ஆனால், இன்று ஆண்டுதோறும் அவர் பிறந்தநாளை ‘செக்’ மொழிக்காக உயிர்விட்ட தியாகியின் பிறந்தநாளாக அந்நாட்டு அரசு கொண்டாடுகிறது.
இப்படி எண்ணற்ற நிகழ்வுகள் உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலுமே கடந்த காலத்தில் அரங்கேறியுள்ளன; இன்றும் தத்தம் தாய்மொழிக்காக உலகம் முழுக்க பல்வேறு மொழியைச் சேர்ந்தவர்கள் குரல் கொடுத்தபடி இருக்கிறார்கள். உலகம் முழுக்கவே பிறமொழி கற்பதை எந்த மொழியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கவில்லை. மாறாக கட்டாயப்படுத்தி, பிறமொழியை மட்டுமே கற்க வேண்டும் என திணிக்கும்போதுதான் தாய்மொழிக்கான உரிமைப் போராட்டம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்குகிறது.
தமிழ்நாட்டிலும் அப்படித்தான் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் நடந்தது; நடக்கிறது. கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக நடந்து வரும் தாய்மொழிக்கான உரிமைப் போராட்டம் – இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம்தான். இந்த பரந்த சரித்திரத்தை மூன்றாகப் பிரிக்கலாம். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல்கட்டமாக 1937ல் இருந்து 1940 வரையிலும், இரண்டாவது கட்டப் போராட்டம் 1948 – 1952 வரையிலும் மூன்றாம் கட்டமாக 1965லும் நடைபெற்றது.
முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம்: தமிழகத்தையும் சேர்த்து இன்றைய பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கியதுதான் அன்றைய சென்னை மாகாணம். இந்த சென்னை மாகாணத்தில் 1937ல் நடந்த பொதுத் தேர்தலில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் 1937ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி சென்னை தியாகராய நகரிலுள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் ராஜாஜி, ‘இந்தியைக் கட்டாயப் பாடமாகப் பள்ளிகளில் ஆக்கப் போகிறேன்’ என்று அறிவித்தார்.
முதன் முதல் இந்தி எதிர்ப்புக் கூட்டம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலே 1937ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் நடந்தது. மறுநாள் ஆகஸ்ட் 28ம் தேதி திருவையாற்றிலே மிகப்பெரிய இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும்தான் பின்னாட்களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு கால்கோள் நாட்டிய நிகழ்ச்சிகளாகும். நடுநிலைப் பள்ளிகளில் இந்துஸ்தானி கட்டாயம் என்று ராஜாஜி உத்தரவிட்டார்.
இந்தி, உருது இரண்டும் இந்துஸ்தானியின் அங்கங்கள். ஒரு சில வார்த்தைகளை நீக்கினால் அது இந்தியாகவும், உருதுவாகவும் பிரியும். ராஜாஜி படிக்கச் சொன்னது தேவனகரி எழுத்துருவில் இருந்த இந்துஸ்தானியை. அதாவது இந்தியை. ஏற்கனவே பல்வேறு வகையில், இந்தி திணிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில், ராஜாஜியின் அறிவிப்பு இந்தி திணிப்பு எதிர்ப்புக்கான முதல் பெரிய போராட்டத்துக்கு வித்திட்டது.
1938 ஏப்ரல் 21ம் தேதி சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கி அரசாங்கம் ஆணை பிறப்பித்தது. அதன்படி கர்நாடகத்தில் நான்கு பள்ளிகளிலும், கேரளத்தில் ஏழு பள்ளிகளிலும், ஆந்திரத்தில் 54 பள்ளிகளிலும், தமிழ்நாட்டில் 60 பள்ளிகளிலும் இந்தி கட்டாயமானது. அப்போது ஆந்திரம், கேரளம், கர்நாடகத்தின் பல பகுதிகள் எல்லாம் சென்னை மாகாணத்திற்குள் இருந்தன.
ராஜாஜியின் இந்த ஆணையை எதிர்த்து அவர் வீட்டுக்கு முன் பல்லடம் பொன்னுச்சாமி என்ற காங்கிரஸ்காரர் உண்ணாவிரதம் இருந்தார். அவர் கைது செய்யப்பட்டு ஆறு வாரம் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப் பெற்றார். முதல்கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் கைதானவர் இவர்தான். அவர் ஒரு காங்கிரஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 24ம் தேதி வடசென்னை சவுகார்பேட்டையிலுள்ள இந்து தியாலாஜிகல் பள்ளிக்கு முன்பு இந்தியைக் கண்டித்து பெண்கள் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதன் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்கள் அணியினர் இவர்கள்தாம். அதற்கு அடுத்த வாரம் உண்ணாமலை அம்மையார் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் கைக்குழந்தையோடு கைது செய்யப்பட்ட தாய்மார்கள் பலர்.
அதில் புவனேசுவரி அம்மையாரும் ஒருவர். இவர் தனது இரண்டரை மாதக் கைக் குழந்தையோடு கைது செய்யப்பட்டார். அப்படி கைது செய்யப்பட்ட அந்த குழந்தைதான் பின்னாளில் வளர்ந்து திமுகவின் மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்த என்.வி.என்.சோமு. தீரர் சத்தியமூர்த்தியும் ராதாகிருஷ்ணனும் காங்கிரசிலேயே இந்தி திணிப்பை எதிர்த்தார்கள்; எனினும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார் ராஜாஜி.
இந்திய குடிமக்கள் மீது ஆங்கிலேய அரசு போலவே கிரிமினல் சட்டத்தைத் தாகூர் மற்றும் ஜின்னாவின் எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமலே பயன்படுத்தினார் ராஜாஜி. 1938 ஜூன் மாதம் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடந்த இந்தி எதிர்ப்புக் கண்டன கூட்டத்தில் பேசியதற்காக அண்ணா செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு நான்கு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அரசியல் களத்தில் அண்ணா கைது செய்யப்பட்டது அதுதான் முதல்முறை.
இதே ஆண்டு டிசம்பர் 8ம் தேதி தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். கர்நாடகத்தில் உள்ள பெல்லாரி சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார். 1938ல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. பல்வேறு அரசியல் இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், தலைவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்தன. இந்தி எதிர்ப்பு சங்கம் உருவாக்கப்பட்டது.
கரந்தை தமிழ்ச் சங்கம், நீதிகட்சி, பெரியாரின் சுயமரியாதை இயக்கம், முஸ்லிம் லீக் இன்னும் பல அமைப்புகள் தமிழை காக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். பெரியார், அண்ணா, மறைமலை அடிகள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், குமாரசாமி பிள்ளை, சோமசுந்தர பாரதியார் மற்றும் இன்னும் பல தலைவர்கள் இந்த முதல்கட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
போராடுபவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை ஏவப்பட்டது. அண்ணா, பெரியார் உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சம் பெற்றிருந்த சமயத்தில்தான் கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து, சென்னையைச் சேர்ந்த நடராசன் ஆகியோர் போராடிய காரணத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காவல்துறை தாக்குதலால் நோய்வாய்ப்பட்டு 1939 ஜனவரி மாதம் நடராசனும், மார்ச் மாதம் தாளமுத்துவம் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேர் அவர்களது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இன்றளவும் மொழிப்போர் தியாகிகளாக தாளமுத்துவும், நடராசனும் நினைவில் கொள்ளப்படுகின்றனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு மொழிப் போர் தியாகிகளின் நினைவாக எழும்பூர் சி.எம்.டி.ஏ கட்டிடத்துக்கு தாளமுத்து நடராசன் மாளிகை என பெயரிட்டார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
இவ்விருவரின் இறப்புக்குப் பிறகு இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. இருப்பினும் ராஜாஜி மனம் மாறவில்லை. இந்தி பயிற்றுவிக்கப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தார். இந்த நிலையில்தான் 1939ல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. செப்டம்பர் மூன்றாம் தேதி இங்கிலாந்து போர்ப் பிரகடனம் செய்தது. இந்தியாவுக்கு முழுமையான விடுதலை கொடுத்தாலன்றி இந்தியா, இங்கிலாந்தை ஆதரிக்க இயலாது என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றிப் பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பியது.
இங்கிலாந்து இதைக் கண்டுகொள்ளாமல் இந்தியர்களை போரில் ஈடுபடுத்தியது. இதை எதிர்த்து இந்தியாவில் பல மாகாணங்களில் இருந்த காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. அதன்படி சென்னை மாகாணத்தை சேர்ந்த ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை 1939ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி பதவி விலகியது. அக்டோபர் 30ம் தேதி ராஜாஜியும் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
1939ல் போராடியவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 1940 பிப்ரவரி 21ம் தேதி கட்டாய இந்தி கற்பிப்பதை கைவிடுவதாக இந்தியாவின் வைசராய் ஜான் எர்ஸ்கின் அறிவித்து, ராஜாஜியின் முடிவை திரும்பப் பெற்றார். வைசராய் ஜான் எர்ஸ்கின் மனதில் தன் தாய்நாடான இங்கிலாந்தை சேர்ந்த ஜான் விக்ளிப் நினைவு வந்திருக்கலாம்.
‘எனது தாய்மொழியான ஆங்கிலத்தில்தான் பைபிளைப் படிப்பேன்’ என்று குரல் கொடுத்து, சாட்டையால் அடிவாங்கி உயிர்நீத்த அவரது திருவுருவப் படம் சில ஆண்டுகளுக்குப் பின் தனது நாட்டு நாடாளுமன்றத்தில் திறக்கப்பட்டு ‘தாய் மொழிக்காக உயிர் நீத்த தனயன்’ என்று அவர் போற்றப்படுவது அந்த நேரத்தில் வைசராயின் நினைவில் வந்திருக்கலாம். தாய்மொழி பற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்தானே ஜான் எர்ஸ்கின்?
இந்த பிப்ரவரி 21ம் தேதியைதான் ஆண்டுதோறும் உலக தாய்மொழி தினமாக உலகம் முழுக்க கடைபிடிக்கிறோம். இதற்கான அறிவிப்பை 1999ம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது. 2000ம் ஆண்டு முதல் இதை உலகம் முழுக்க கடைபிடித்து வருகிறோம்.
யுனெஸ்கோவின் இந்த தீர்மானத்துக்குப் பின்னால் வங்கதேச நாட்டில் நடந்த உருது மொழி திணிப்புக்கு எதிரான போராட்டம் இருக்கிறது. என்றாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை அதே பிப்ரவரி 21ம் தேதிதான் முதல் முறையாக இந்தியை திணித்த அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வெற்றிப் பெற்ற நாள்.
எனவேதான் ‘உலக தாய்மொழி தினம்’ தமிழர்களுக்கு ‘உயிர் தினமாக’ இருக்கிறது.
* போராடுபவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை ஏவப்பட்டது. அண்ணா, பெரியார் உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
* 1938 ஜூன் மாதம் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடந்த இந்தி எதிர்ப்புக் கண்டன கூட்டத்தில் பேசியதற்காக அண்ணா செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு 4 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
* உலகம் முழுக்கவே பிறமொழி கற்பதை எந்த மொழியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கவில்லை. மாறாக கட்டாயப்படுத்தி, பிறமொழியை மட்டுமே கற்க வேண்டும் என திணிக்கும்போதுதான் தாய்மொழிக்கான உரிமைப் போராட்டம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்குகிறது.
