×

20 ஆண்டுக்கு வரி இல்லை… ஏகப்பட்ட சலுகைகள்: ஏஐ தாக்க மாநாட்டால் யாருக்குப் பலன்? நிலம், நீர் வளங்கள் பறிபோகும் அபாயம்; டேட்டா சர்வராக மட்டுமே மாறும் பரிதாபம்

கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெற்ற ஏஐ தாக்க மாநாடு மிகப் பிரமாண்டமாக டெல்லியில் நடைபெற்றது. 89 நாடுகளை சேர்ந்த அமைப்புகள் பங்கேற்றன. கூகுள், மைக்ரோசாப்ட், ஓபன் ஏஐ, என்விண்டா, மெட்டா, குவால்காம், உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்திய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்றனர். ஏஐ தொழில்நுட்பத்துக்காக ஏறக்குறைய ரூ.23 லட்சம் கோடியை முதலீடு செய்ய நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.

ஏஐ தொழில்நுட்பத்தின் ஆற்றலையும், உலக நாடுகள் பயன்படுத்தும் விதத்தையும் மாற்றியமைக்கும் அளவுக்கு இந்த மாநாடு ஒரு திருப்பு முனையாக அமைந்தது . நம் நாட்டின் சாதனைகளை கண்டு உலக நாடுகளின் தலைவர்கள் வியந்து போயினர். ஏஐ தொழில்நுட்ப ஆற்றலை எதிர்காலத்தில் இவ்வுலகம் எப்படி பயன்படுத்தப்போகிறது என்பதற்கான பாதையை இந்த மாநாடு வகுத்திருக்கிறத என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்தை வெளிப்படுத்தினார். மொத்தத்தில் இந்தியாவின் கொண்டாட்டத்துக்கு இந்த மாநாடு வழி வகுத்து விட்டது என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு வகையில் இது ஒரு சாதனை மைல்கல் எனக் கொள்ளப்பட்டாலும், கடந்த மாதம் சமர்ப்பித்த ஒன்றிய பட்ஜெட் அறிவிப்புகளுடன் ஒப்பிடுகையில், உண்மையில் மேற்கண்ட முதலீட்டு திட்டங்களால் பலனடையப்போவது இந்தியாவா? சர்வதேச நிறுவனங்களா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக, துறை சார்ந்த அறிஞர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். கடந்த 1ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பட்ஜெட்டில், இந்தியாவின் ஏஐ திட்டத்துக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்தது. அதாவது, ஏஐ மேம்பாட்டுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும். உள்நாட்டில் ஏஐ தொடர்பான ஆய்வுகள், உள் கட்டமைப்புகள், ஸ்டார்ட் அப் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் இதன் மூலம் கவனம் செலுத்தப்படும். எனினும், கடந்த ஆண்டில் இதற்கென ஒதுக்கீடு செய்த ரூ.2,000 கோடியுடன் ஒப்பிடுகையில் இது பாதிதான்.

ஆனால், பெரிய அளவில் கவனம் பெற்ற ஒரு அறிவிப்பு, வரி விடுமுறை. அதாவது, இந்தியாவில் ஏஐ தரவு மையங்கள் அமைக்கும் நிறுவனங்களுக்கு 2047ம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. உதாரணமாக கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் ஏஐ தரவு மையங்களை அமைத்தால் அவற்றுக்கு 2047ம் ஆண்டு வரை வரி விதிக்கப்படாது. இந்தியாவை உலகின் ஏஐ மையமாக மாற்றுவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதேபோன்று, செமிகண்டக்டர் 2.0 திட்டத்தின் கீழ் இந்தியாவில் சிப் உற்பத்தியை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் வெளியாகின. இந்த சிப் உற்பத்தியும் ஏஐ உடன் தொடர்புடையதே.

இந்த அறிவிப்புகள் வெளியாகி சில வாரங்களிலேயே ஏஐ தாக்க மாநாடு நடைபெற்றிருக்கிறது. இதில் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதாக உறுதி அளித்திருக்கின்றன. இந்த முதலீட்டில் தரவு மையங்கள், ஏஐ சிப் உற்பத்தி, இந்திய நிறுவனங்களுடன் பங்குதாரராக சேர்வது, ஸ்டார்ட் அப் நிதி போன்றவை அடங்கும். அதிகபட்சமாக ரிலையன்ஸ் நிறுவனம், அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடியை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதுபோல், அதானி நிறுவனமும் முதலீடு செய்ய உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களை பொறுத்தவரை ரூ.4,60,000 கோடி முதலீடு செய்கிறது.

இந்த நிறுவனம் ஏற்கெனவே ரூ.1,61,000 கோடியை முதலீடு செய்வதாக உறுதி அளித்திருக்கிறது. இதே போன்று ஓபன் ஏஐ, கூகுள், குவால்காம், ஏஎம்டி, ஆந்த்ரோபிக் நிறுவனங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களின் இந்த முதலீடுகள் ஏஐ தொழில்நுட்ப மேம்பாட்டுக்காகவே என மேம்போக்காக பார்க்கப்பட்டாலும், 20 ஆண்டு வரி விலக்கு, மையம் அமைப்பதற்கான நிலம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு சலுகைகள் போன்றவை தான் இந்த நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய தூண்டியிருக்கின்றன என்பது துறை அறிஞர்களின் வாதமாக உள்ளது.

இதுபோல், இந்த நிறுவனங்கள் இந்தியாவில் பல லட்சம் கோடி முதலீடு செய்து ஏஐ மேம்பாட்டுக்கான ஆய்வுகளை மேற்கொள்ளலாம். ஆனால், அந்த நிறுவனங்களின் ஏஐ சர்வர்கள் இங்குதான் இருக்கும். தொழில்நுட்ப தீர்வு வழிமுறைகள், ஐபி மற்றும் இந்த மையங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு கிடைக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாயும் இந்த நிறுவனங்கள் ஈட்டும் பெரும் பலன்களாக அமையும். இதுமட்டுமின்றி, அவர்கள் இங்கிருந்து இந்த துறை சார்ந்த இன்ஜினியர்களை பணியமர்த்தலாம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் கைகோர்க்கலாம் ஆனால் இதெல்லாம் கண்டுபிடிப்புகளுக்காக அல்ல… சலுகை நிலத்துக்காகவும், வரி பலன்களுக்காகவும்தான். எனவே, இதை வைத்து எப்படி இந்தியா ஏஐயில் சூப்பர் பவராக மாறும்?, என்கின்றனர்.

* வேலை வாய்ப்புக்கு வேட்டு வருமா?
ஏஐ தொழில்நுட்பம் மேம்படுவது பெரும் பலன்களை அளிக்கும் என்றாலும், வெளிநாட்டு நிறுவனங்களிலேயே ஏராளமானோர், ஏஐ பயன்பாட்டால் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டில் 55,000 பேரின் வேலை பறிபோயுள்ளது. ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஏஐ சார்ந்த ரோபோட் பயன்பாட்டால் பலரது வேலை பறிக்கப்பட்டது. இப்படியிருக்க இந்தியாவிலேயே ஏஐ டேட்டா மையங்கள் நிறுவுவது, இத்துறையில் திறமையானவர்களை உருவாக்குவதற்கு மாறாக வேலை வாய்ப்புக்கு வேட்டு வைக்குமா என்ற அச்சமும் காணப்படுகிறது.

* வறட்சியை விலை கொடுத்து வாங்கலாமா? 5 ஏஐ சர்வர்களுக்கு தினசரி தேவை 5 மில்லியன் லிட்டர் தண்ணீர்
கம்ப்யூட்டர் சர்வர்களை குளிர்விப்பதில் இரண்டு வகைகள் உள்ளன. இதில் பிரதானமாக தண்ணீர் மூலம் குளிர்விக்கும் முறையைத்தான் பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றனர். சிறிய டேட்டா மையமாக இருந்தால் நாள் ஒன்றுக்கு 50,000 லிட்டர் முதல் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை செலவாகும். பெரிய ஏஐ டேட்டா மையங்களாக இருந்தால் நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் லிட்டர் முதல் 5 மில்லியன் லிட்டர் வரை செலவாகும். பல ஆயிரம் குடும்பங்கள் நாள் ஒன்றுக்கு பயன்படுத்துவதற்கு ஈடான அளவு இது. டெல்லி, சென்னை, ஐதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் போதுமான தண்ணீர் சேமிப்பு இல்லாத பட்சத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உருவாகும்.

இந்நிலையில், டேட்டா மையங்களை அனுமதித்தால் அவற்றுக்கு செலவிடப்படும் தண்ணீர் கணக்கிலடங்காது. மின்விசிறிகள் மூலம் குளிர்விக்கும் முறை இருந்தாலும் அதனால் பெரிய அளவில் பலன் இல்லை. குறிப்பாக ஏஐ மையங்களுக்கு இந்த முறை சரிவராது என கணினி தொழில்நுட்ப துறையினர் தெரிவிக்கின்றனர். சிறிய டேட்டா மையங்கள் என்ற நிலை மாறி ஏஐ தொழிற்சாலைகள் என்கிற அளவுக்கு பெரிய திறன் கொண்ட மையங்கள் அமைக்கப்படுகி்ன்றன. உதாரணமாக 100 மெகாவாட் டேட்டா மையத்தை குளிர்விக்க நாள் ஒன்றுக்கு 1.1 மில்லியன் கேலன் அதாவது 41,63,953 லிட்டர் செலவாகும் என மற்றொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

போர்ப்ஸ் தகவலின்படி 2027ம் ஆண்டுக்குள் ஏஐயின் ஒருநாள் தண்ணீர் பயன்பாடு 6.6 லட்சம் லிட்டராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் மைக்ரோசாப்டின் உயர்நிலை தரவு மையங்களில் சாட்ஜிபிடி-3 மாதிரியை வைத்து ஆய்வு செய்ததில் 7,00,000 லிட்டர் ஆவியாவதாக கண்டறிந்தனர். ஒவ்வொரு 10 முதல் 50 பதில்களுக்கும் 16 அவுன்ஸ் தண்ணீர் செலவாகும் என இதில் தெரிய வந்தது. இந்த நிலையில், இந்தியாவில் நிறுவப்படும் ஏஐ மையங்கள் நாட்டின் தண்ணீர் வளத்தையே உறிஞ்சி விடும் அபாயம் உள்ளது.

Tags : AI Impact Conference ,Delhi ,Google ,Microsoft ,OpenAI ,Nvidia ,Meta ,Qualcomm ,
× RELATED 20வது நிமிடத்தில் இருந்தே பலன்கள்...