×

மாநில சுயாட்சியை வலுவிழக்க செய்யும் ஒன்றிய அரசு: கூட்டாட்சி முறையை மறுசீரமைப்பது அவசியம்; முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்

மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் கே.அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் மு.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு தனது அறிக்கையை சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டானிடம் சமர்ப்பித்தது. அரசியலுக்கு அப்பாற்பட்ட முயற்சியாக அமைக்கப்பட்ட இக்குழு, தற்போது கூட்டாட்சி முறை எதிர்கொள்ளும் சவால்களை விரிவாக ஆய்வு செய்தது. ஆளுநரின் பங்கு, மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, தேர்தல்கள், கல்வி, மருத்துவம், சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட பல முக்கியமான விவகாரங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கையின் முதற்பகுதி நேற்று அளிக்கப்பட்டது.

அதில் கூறி இருப்பதாவது: இந்திய அரசமைப்பு சட்டம், வடிவத்தில் கூட்டாட்சி தன்மையை கொண்டிருந்தாலும், தெளிவான அதிகார குவிப்பு சார்புடனேயே உருவாக்கப்பட்டது. 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் கூறுகளை அதிகளவில் உள்வாங்கி இயற்றப்பட்ட இந்த அரசமைப்பு, அதிகாரத்தின் பெரும்பகுதியை டெல்லியில் குவித்துவிட்டு, மாநிலங்களுக்கு ஒப்புநோக்கு அளவில் மிகக் குறைவான அதிகாரப் பகிர்வே ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பு, அந்த சூழலில் நிலவிய இந்திய பிரிவினை, பதினான்கு மாகாணங்கள் – 552 சுதேச அரசுகள் ஒருங்கிணைப்பு, பிரிவினை சக்திகளால் தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடுமோ என்ற வலுவான அச்சம் ஆகியவற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டது. அத்தகைய சூழலில், அதிகார குவிப்பு என்பது வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமன்றி, தவிர்க்க முடியாத ஒன்றாகவும் கருதப்பட்டது.

ஆயினும், அத்தகைய பதற்றமான விவாதங்களின் இடையிலும், அரிய தெளிவுடன் குரல்கள் ஒலிக்கவே செய்தன. ஒன்றியம் வலுவாக அமைய, கண்மூடித்தனமாக அனைத்து அதிகாரங்களையும் தன்னிடம் குவித்துக்கொள்ள தேவையில்லை; மாறாக, தேசிய அளவிலான செயல்பாடுகளுக்கு பொருத்தமில்லாத பொறுப்புகளை ஏற்க மறுக்கும் ஒழுங்குமுறையில்தான் உள்ளது என்பதை க.சந்தானம் அரசமைப்பு நிர்ணய சபைக்கு நினைவுபடுத்தினார். ‘இத்தகைய ஆக்கப்பூர்வமான மற்றும் எதிர்மறையான அதிகார வரம்பு நிர்ணயத்தில்தான் உண்மையான கூட்டாட்சி முறை அடங்கியுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒரே நோக்கில் இரண்டு நிலையான கொள்கைகள் அடங்கியுள்ளன. முதலாவதாக, கள நிலைமை நன்கு அறிந்தவர்களாலும், மக்களுடன் நெருக்கமாக உள்ளவர்களாலும் அதிகாரம் செலுத்தப்படும்போது மட்டுமே, மிகவும் பயனுள்ளதாக அமையும்; இரண்டாவதாக, அளவிற்கு அதிகமான அதிகார குவிப்பு, தனி அதிகார அமைப்பால் திறம்படச் செய்ய இயலாத பணிகளை, அதன் மீது சுமத்துவதன் வழியாக அந்த அமைப்பையே நலிவடையச்செய்துவிடும். விண்வெளி ஆய்வு முதல் ஊரகத் தூய்மைப் பணி வரை அனைத்தையும் மேற்கொள்ள முயலும் ஓர் அரசு, தனது அதிகார பரப்பை விரிவுபடுத்திக் கொள்ளலாமே தவிர, அதன் செயல்பாட்டை திறன்பட செய்ய இயலாது.

அவசியம் என்கிற பெயரால் கையகப்படுத்தப்படும் அதிகாரம், அந்த அவசியம் நீங்கிய பின்னரும் எளிதில் பின்வாங்குவதில்லை என்பதை வரலாறு மெய்ப்பிக்கிறது. சுதந்திரத்திற்கு பிந்தைய பல ஆண்டுகளில், ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஒரே தேசிய கட்சியின் ஆதிக்கம் நிலவியதால், இத்தகைய அதிகார குவிப்பு போக்குகள் வலுப்பெற்றன. இது மாநிலத் தலைமையின் சுயாட்சியை கட்டுப்படுத்தும் ‘மேலிடத்திற்கு அடிபணிந்து செல்லும் பண்பாட்டை’ கொண்டிருந்தது. பின்னர், ஒன்றியத்தில் கூட்டணி அரசுகளின் வருகையும், மாநிலங்களில் மாநில கட்சிகளின் எழுச்சியும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எவ்வித குந்தகமும் விளைவிக்காமல் ஒரு சீரான கூட்டாட்சி முறையை உருவாக்க முயன்றன.

இன்றைய காலகட்டத்தில் உள்ளது போன்ற அரசியல் முதிர்ச்சியும், மொழிவழி ஒருங்கிணைப்பும் கொண்ட மாநிலங்கள் 1950-களிலேயே இருந்திருக்குமேயானால், நமது அரசமைப்பின் வடிவமைப்பு இன்னும் கூடுதலான அதிகாரப்பகிர்வு கொண்ட பாதையில் பயணித்திருக்கும். ஒரு மனிதன் தனது குழந்தை பருவத்து மனப் போராட்டங்களுக்கு என்றென்றும் அடிமையாக இருக்க முடியாது என்பதை போலவே, ஒரு நாடும் தனது தொடக்க கால பதற்றங்களின் சுமையை கருதிக்கொண்டே எப்போதும் இயங்க முடியாது. இந்திய கட்டமைப்பு இன்று உறுதியான, வலுவான அடித்தளத்தின் மீது நிலைபெற்றுள்ளது.

ஆயினும், எழுபத்தாறு ஆண்டுகளுக்கு பின்னரும், நமது அரசமைப்பு நடைமுறை, 1940-களின் இறுதிக் காலத்தின் முறைகளையே இன்றும் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் அவசியமென்று கருதப்பட்ட அதிகார குவிப்பு, இன்று பழக்கமாகவே மாறிவிட்டது. தொடர்ச்சியான அரசமைப்பு சட்டத் திருத்தங்கள், பொதுப்பட்டியலில் உள்ள இனங்களின் மீது ஒன்றிய அரசால் இயற்றப்படும் விரிவான சட்டங்கள், நிபந்தனைகளுடன் கூடிய நிதிக்குழு ஒதுக்கீடுகள், நெகிழ்வற்ற தன்மையுடன் கூடிய ஒன்றிய அரசின் திட்டங்கள் ஆகியவற்றின் வாயிலாக அதிகாரங்கள் மேலும் ஒன்றிய அரசை நோக்கியே செல்கிறது.

டெல்லியில் உள்ள அமைச்சகங்கள், மாநிலத்தின் பணிகளையே நகலாக மேற்கொள்வதுடன், நுண்மேலாண்மை, நடைமுறை மேற்பார்வைகள் ஆகியவை வழியாக மாநிலங்களின் முன்னுரிமைகளை தாமே வழிநடத்திட முயல்கின்றன. மக்களாட்சியின் அடுக்குநிலைக்கு முரணாக, பொதுப்பட்டியலில் உள்ள இனங்களில் மாநிலங்கள் இயற்றியுள்ள சட்டங்களை, ஒன்றிய நிர்வாகத்துறை துணைச்சட்டங்கள் வழியாக மீறி செயல்பட முயல்கிறது. இத்தகைய போக்கு அரசமைப்பு சட்டக் கோட்பாடுகளுக்கு இசைவானதாக இல்லை.

எஸ்.ஆர்.பொம்மை, இந்திய ஒன்றியத்திற்கு (1994) எதிரான வழக்கில், கூட்டாட்சி என்பது நமது அரசமைப்பின் அடிப்படை பண்புகளின் ஒரு பகுதி என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதுடன், மாநிலங்கள் ஒன்றியத்தின் கிளை அமைப்புகள் அல்ல; அவை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகார வரம்பிற்குள் உச்ச அதிகாரம் கொண்டவை என்பதையும் உறுதிப்படுத்தியது. கூட்டாட்சி என்பது நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல; அது இந்தியாவின் வரலாற்றிலும் பன்முகத்தன்மையிலும் வேரூன்றிய கொள்கை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய நீதித்துறை உறுதிப்படுத்தல்களுக்கு இடையிலும், சட்டமன்ற அதிகார விரிவாக்கம், நிர்வாகத் துறையின் வரம்பு மீறிய செயல்பாடுகள், பன்முகத் தேவைகள் ஆகியவற்றைவிட தேசிய அளவிலான ஒற்றை தீர்வுகளுக்கே முன்னுரிமை அளிக்கும் சில நீதித்துறை விளக்கங்கள் ஆகியவற்றின் வாயிலாக மாநில சுயாட்சி தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களை வலுவிழக்கச் செய்வதன் வழியாக ஒன்றிய அரசு வலுவடையும் என்ற மாய தோற்றம் இதன் பின்னணியில் நிலவுகிறது. உண்மையில், ஒன்றியமும் மாநிலங்களும் ஒன்றோடொன்று போட்டியிடும் போட்டியாளர்கள் அல்ல; அவர்கள் ஒரு பொதுவான அரசமைப்பு நடைமுறையை பேணிக் காக்கும் பங்குதாரர்களே.

இந்தியாவின் பரப்பும், பன்முகத்தன்மையும், அதிகார குவிப்பு சார்ந்த கொள்கை வடிவமைப்புகளை இயல்பாகவே ஒரு வரம்பிற்கு உட்பட்டதாக அமைக்கின்றன. டெல்லியில் உள்ள எந்தவொரு அதிகார அமைப்பும், எவ்வளவுதான் அறிவார்ந்ததாக இருந்தாலும், ஒவ்வொரு மொழிப் பகுதிக்கும் தேவையான வேளாண் சூழல், தொழில் தொகுப்பு அல்லது தொழிலாளர் சந்தை ஆகியவை சார்ந்த நுணுக்கமான கொள்கைகளை வடிவமைக்க இயலாது. அதிகார பரவலாக்கம், இத்தகைய வரம்புகளை சீர்செய்து, மாநிலங்கள் தத்தமது களத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.

மாநிலங்கள் தங்களுக்கு தேவையான கொள்கைகளை சிறிய அளவில் வடிவமைத்து சோதித்துப் பார்க்கவும், தோல்விகள் ஏற்பட்டால் அவை நாடு தழுவிய பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கவும், வெற்றிகரமான புத்தாக்கங்களை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்லவும் அல்லது தேசிய அளவில் நடைமுறைப்படுத்தவும் உதவுகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த பல திட்டங்கள் இத்தகைய பாதையிலேயே தோன்றியவை ஆகும். தமிழ்நாட்டின் சத்துணவு திட்டமும், மருத்துவ கட்டமைப்பும், எழுத்தறிவில் கேரளாவின் சாதனைகளும், மகாராஷ்டிராவின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் முதலில் மாநில அளவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களாக தொடங்கி, பின்னரே தேசியக் கொள்கைகளாக உருப்பெற்றன. மிதமிஞ்சிய அதிகார குவிப்பு, புத்தாக்கங்களுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையான இத்தகைய பன்முக உத்திகளையே அடக்கிவிடுகிறது.

மாநிலங்களுக்கு நிர்வாக அல்லது தொழில்நுட்பத் திறன் இல்லை, எனவே ஒன்றியத்தின் தலையீடு அவசியம் என்று அதிகாரக் குவிப்பை ஆதரிப்போர் வாதிடுவது உண்டு. ஆனால், இத்தகைய தலையீடுகள் எதை சரிசெய்ய முயல்வதாக கூறுகின்றனவோ, அந்த திறனையே முடக்கி, நிலையான சார்புநிலையை உருவாக்குகின்றன. தன் குழந்தைகளுக்கு பொறுப்புகளை வழங்காத பெற்றோரும், அதிகாரத்தை பகிர்ந்தளிக்க மறுக்கும் தலைவர்களும் தவிர்க்க முடியாமல் மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலையைத்தான் உருவாக்குகிறார்கள்.

இது அரசாங்கங்களுக்கும் பொருந்தும். பொறுப்பு, தவறுகளை செய்யவும் அவற்றை சரிசெய்து கொள்ளவும் வழங்கப்படும் சுதந்திரம் ஆகியவற்றில் இருந்தே திறமை உருவாகிறது. இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இணையான பரப்பைக் கொண்ட இந்தியாவின் மாநிலங்கள், இயல்பாகவே திறமையற்றவை என்றும், எனவே அவை ஒன்றியத்தின் அதிகாரத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்பட வேண்டும் என்றும் கருதுவது தேச சுயமரியாதைக்கே முரணானது.
ஒன்றிய அதிகார குவிப்பு, மேன்மையான விளைவுகளை தந்திருந்தால்கூட, அதனை நியாயப்படுத்தி இருக்கலாம்.

ஆனால், அதிகாரம் பரவலாக்கப்பட்ட கூட்டாட்சி நாடுகளுடனோ, உலகளாவிய அளவுகோல்களுடனோ அல்லது இந்தியாவின் சொந்த இலக்குகளுடனோ ஒப்பீடு செய்கையில், ஒன்றியத்தின் சாதனைகள் நம்பத்தகாததாக உள்ளது. அனைவருக்கும் சென்றடைதல், தரம், உண்மையான சமத்துவம் அல்லது உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றை உறுதிசெய்வதில் இத்தகைய அதிகார குவிப்பு முறை பெரும் பின்னடைவையே சந்தித்து வருகிறது. மாறாக, அதிகார குவிப்பு சிக்கலான சட்ட நெறிமுறைகளையும், விரிவடையும் பணிகளுக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும் நிதிப் பற்றாக்குறைகளும், குறைக்கப்பட்ட பொறுப்புணர்வும், மாநிலங்களின் திறனை படிப்படியாக சிதைப்பதற்கே வழிவகுக்கிறது.

தமிழ்நாடு இத்தகைய பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தது. 1967ம் ஆண்டில், அண்ணா குறிப்பிடுகையில், இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் காக்க ஒன்றிய அரசு வலிமையாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை என்றார். ஆனால், அதற்காக தேசிய பாதுகாப்போடு நேரடி தொடர்பில்லாத சுகாதாரம், கல்வி போன்ற ஒவ்வொரு துறையையும் ஒன்றியம் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பது இதன் பொருளல்ல என்றும் சுட்டிக்காட்டினார். அவருக்கு பின் வந்த கலைஞர் அவர்கள், ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கத்தின் மூலம் இந்த தத்துவத்தை முன்னெடுத்துச் சென்றார்.

அதன் ஒருபகுதியாக, 1969ம் ஆண்டு நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒன்றிய-மாநில உறவுகளை ஆராய, முதலாவது குழுவை அமைத்தார். இக்குழுவின் 1971ம் ஆண்டு அறிக்கை, இந்தியாவின் கூட்டாட்சி விவாதங்களில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதனை தொடர்ந்து அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணையம் (1983-88), பூஞ்சி ஆணையம் (2007-10) போன்றவை அதிகார சமநிலையை சீர்செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், அடிப்படையான கட்டமைப்பு மாற்றங்களை பரிந்துரைக்க தவறிவிட்டன.

இந்தியா, இன்று அரசமைப்பு வரலாற்றில் முக்கியமான தருணத்தில் உள்ளது. இது தற்போதுள்ள நிலையிலேயே நிறைவு கொண்டிருக்கும் நேரமல்ல; சீரமைக்க வேண்டிய தருணம், சரி செய்ய வேண்டிய தருணம். இதன் நோக்கம் ஒன்றியத்தை பலவீனப்படுத்துவது அல்ல; மாறாக, ஒன்றியத்தை சீர்செய்து, தேசிய அளவிலான பொறுப்புகளில் கவனம் செலுத்த வழிவகை செய்வதும், அதே வேளையில் திறம்பட நிர்வகிப்பதற்கு தேவையான சுயாட்சியை மாநிலங்களுக்கு மீட்டெடுப்பதுமே ஆகும்.

இத்தகைய சீரமைப்பு நாட்டின் ஒற்றுமையை குறைக்காது; மாறாக, அதிகாரத்தை பொறுப்புணர்வோடு இணைப்பதன் வழியாக மென்மேலும் வலுபெற உதவும். அறிவார்ந்த விவாதங்களை உருவாக்கி, ஒன்றிய-மாநில உறவுகளில் சமநிலையை மீட்டெடுத்து, வரையறுக்கப்பட்ட பணிகளில் கவனம் செலுத்துவதன் வாயிலாக ஒன்றிய அரசு வலிமையாகவும், மாநிலங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதன் வழியாக மாநிலங்கள் வலிமையாகவும் விளங்கும் புதிய அரசமைப்பு சட்டச் சூழலை உருவாக்க உதவும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாடு அரசு இந்த அறிக்கையை மக்கள் முன்வைக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ஒன்றியத்தில் கூட்டணி அரசுகளின் வருகையும், மாநிலங்களில் மாநில கட்சிகளின் எழுச்சியும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எவ்வித குந்தகமும் விளைவிக்காமல் ஒரு சீரான கூட்டாட்சி முறையை உருவாக்க முயன்றன.
* இன்று அரசமைப்பை சீரமைக்க வேண்டிய தருணம். இதன் நோக்கம் ஒன்றியத்தை பலவீனப்படுத்துவது அல்ல; மாறாக, ஒன்றியத்தை சீர்செய்து, தேவையான சுயாட்சியை மாநிலங்களுக்கு மீட்டெடுப்பதுமே ஆகும். இத்தகைய சீரமைப்பு நாட்டின் ஒற்றுமையை குறைக்காது; மாறாக, அதிகாரத்தை பொறுப்புணர்வோடு இணைப்பதன் வழியாக மென்மேலும் வலுபெற உதவும்.
* டெல்லியில் உள்ள அமைச்சகங்கள், மாநிலத்தின் பணிகளையே நகலாக மேற்கொள்வதுடன், நுண்மேலாண்மை, நடைமுறை மேற்பார்வைகள் ஆகியவை வழியாக மாநிலங்களின் முன்னுரிமைகளை தாமே வழிநடத்திட முயல்கின்றன.
* அனைவருக்கும் சென்றடைதல், தரம், உண்மையான சமத்துவம் அல்லது உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றை உறுதிசெய்வதில் இத்தகைய அதிகார குவிப்பு முறை பெரும் பின்னடைவையே சந்தித்து வருகிறது. மாறாக, அதிகார குவிப்பு சிக்கலான சட்ட நெறிமுறைகளையும், விரிவடையும் பணிகளுக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும் நிதிப் பற்றாக்குறைகளும், குறைக்கப்பட்ட பொறுப்புணர்வும், மாநிலங்களின் திறனை படிப்படியாக சிதைப்பதற்கே வழிவகுக்கிறது.
* மாநிலங்களை வலுவிழக்கச் செய்வதன் வழியாக ஒன்றிய அரசு வலுவடையும் என்ற மாய தோற்றம் இதன் பின்னணியில் நிலவுகிறது. உண்மையில், ஒன்றியமும் மாநிலங்களும் ஒன்றோடொன்று போட்டியிடும் போட்டியாளர்கள் அல்ல; அவர்கள் ஒரு பொதுவான அரசமைப்பு நடைமுறையை பேணிக் காக்கும் பங்குதாரர்களே.

Tags : EU State ,PM ,Stalin ,K. ,Supreme Court ,Justice ,Kurian Joseph ,Ashok Vardhan Shetty ,Mu ,Naganathan ,Chennai ,
× RELATED இந்தியாவில் 5க்கு ஒன்று என்ற ரீதியில்...