×

இந்தியாவில் 5க்கு ஒன்று என்ற ரீதியில் இணையதள குற்றங்களில் அதிகம் பதிவாகும் பொருளாதார மோசடி: விழிப்புணர்வு நாளில் அதிர்ச்சி தகவல்

சிறப்பு செய்தி
இணையதளம் என்பது மின்னணு வடிவில் பல தகவல்களை சேகரித்து வைத்திருக்கும் இணைய பக்கங்களின் தொகுப்பாகும். இப்படி சேகரிக்கப்பட்ட இணையதளங்களை பிரவுசர் வசதியுடன் திறந்து பார்க்க முடியும். தற்ேபாதைய சூழலில் இணையதளத்தை திறந்து பார்ப்பதற்கு கூகுள் உள்ளிட்ட பல்வேறு பிரவுசர்கள் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் கம்ப்யூட்டர்கள், லேப்டாப்களில் மட்டுமே நாம், பிரவுஸ் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியால் தற்போது நாம் உபயோகிக்கும் ஆன்ட்ராய்டு போன்களிலேயே அனைத்து இணையதளங்களையும் பிரவுஸ் செய்யலாம் என்ற நிலை வந்துள்ளது. இது நமது வேலைகளை மிகவும் எளிதாக்கி உள்ளது. நிறுவனங்கள், கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தனிநபர்கள் என்று அனைவரும் தங்கள் தேவைக்கேற்ப இணையதளத்தை உருவாக்கி கொள்ளலாம். அதன்மூலம் தங்களது கருத்துகளை உலகிற்கு கொண்டு சேர்க்கலாம். எந்த மூலையில் இருந்தும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

சாதாரண வியாபாரியாக உள்ளூரில் உள்ள ஒருவர், இணையதளத்தின் உதவியால் உலகம் முழுவதும் தனது பொருள் குறித்து கூறி விற்க முடியும். படிக்கும் மாணவர்கள் இணையத்தின் உதவியால் பல தகவல்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும். இந்தவகையில் இணையதளம் என்பது நம்வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றாகி விட்டது. ஆக்கப்பூர்வமான பல பணிகளுக்கு இணையம் உதவினாலும், சிலர் இதனை தவறாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த அரிய தொழில்நுட்பத்தை நாம் உபயோகிப்பதிலும் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதனை எதிர்கொள்வதற்கு பாதுகாப்பான இணையதள பயன்பாடு என்பது மிகவும் அவசியம். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் பிப்ரவரி 5ம் தேதி (நேற்று) உலகளாவிய இணைய பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதுகுறித்து குளோபல் கணினி ஆய்வு மைய நிர்வாகிகள் கூறியதாவது: ஆன்ட்ராய்டு செல்போன்கள் நம் அனைவரது வாழ்விலும் ஒரு அங்கமாகி விட்டது. இப்படி செல்போன் வைத்திருப்போரில் 58 சதவீதம் பேர் இணையதள வசதிகளை பெற்றுள்ளனர் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இதில் இணையதளங்கள் என்பது சிறந்த பொழுதுபோக்கு அம்சத்திற்கு வழிவகுக்கிறது. அறிவு வளர்ச்சிக்கும் வித்திடுகிறது என்றால் அது மிகையல்ல. இப்படி பல்வேறு நன்மைகள் இருந்தாலும் சமீபகாலமாக அதிகரித்து வரும் இணையதள மோசடிகள் என்பது மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தி வருகிறது என்பதே உண்மை.

இணையதளத்தில் டிஜிட்டல் தொழில் நுட்பங்களை தவறாக பயன்படுத்தி செய்வதே இணையதள குற்றங்கள் அல்லது சைபர்கிரைம் குற்றங்கள் எனப்படுகிறது. இதில் கம்ப்யூட்டர் என்பது ஒரு இலக்காகவும், குற்றங்களை செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இணையத்தின் வளர்ச்சி தற்போது உச்சத்தில் உள்ளது. இதன்மூலம் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அறிந்து கொள்ளும் வசதியுள்ளது. இதுவும் இணையதள குற்றங்கள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. முதலீட்டு மோசடி என்பது சமீப ஆண்டுகளாக இணையதளம் மூலம் அரங்ேகறும் மிகப்பெரும் அவலமாக மாறி வருகிறது. 2025ம் ஆண்டில் பதிவான சைபர் கிரைம் குற்றங்களில் ஐந்தில் 1 சதவீதம் நிதிநிறுவனங்களை உள்ளடக்கியது. டிஜிட்டல் மயமாக்கல் காரணமாகவே இது நடக்கிறது. 59 சதவீதம் இந்திய நிறுவனங்கள் நிதி சார்ந்த பொருளாதார மோசடியை எதிர்கொண்டுள்ளது. இது உலகளாவிய சராசரியான 41 சதவீதத்தை விட, 18 சதவீதம் அதிகமாகும். 2024ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகமாகும்.

2025ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின் படி இந்திய வணிகங்களுக்கு கொள்முதல் மோசடி என்பது தற்போது ஒரு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 50 சதவீதம் பேர் இதனால் பெரியஅளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகளவில் ஒப்பிடும் போது 21 சதவீதம் அதிகமாகும். இந்த ெகாள்முதல் மோசடி என்பது தொழில்களை முடக்கி, பொருளாதாரத்திற்கும் பெரும் இழப்புகளை ஏற்படுத்துகிறது.
கொள்முதல் மோசடியை எதிர்கொள்ள இந்திய நிறுவனங்கள் தரவு பகுப்பாய்வுகளை பயன்படுத்துகின்றன. 52 சதவீதம் பரிவர்த்தனைகள் ஒப்பந்தத்திற்கு முன்பும், 46 சதவீதம் பரிவர்த்தனைகள் ஒப்பந்தத்திற்கு பின்பும் செய்யப்படுகின்றன. 47 சதவீதம் வாடிக்ைகயாளர்கள் மோசடி வணிகங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பொருளாதார குற்றங்களிலும் 33 சதவீதம், ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதை உணர்ந்து மக்களும், நிறுவனங்களும் செயல்படுவதே தொடரும் மோசடிகளுக்கு தீர்வு தரும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

₹4 ஆயிரம் கோடி மோசடி தடுப்பு
‘‘இணையதள குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் தொழில்நுட்பம் தெரிந்த படித்த இளைஞர்களாக உள்ளனர். குறுக்கு வழியில் சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே முக்கிய நோக்கமாக உள்ளது. இணையதள மோசடிக்கு பேஸ்புக்கில் விளம்பரங்களை வெளியிடுவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த மோசடியை தடுப்பதற்காக ஒரு நெட்வொர்க்கை, ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தொலை தொடர்புத்துறை ஒரு தனிச்செயலியை நிறுவியுள்ளது. இதன் மூலம் ₹4ஆயிரம் கோடி மதிப்பிலான மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 10 லட்சம் பேர் என்ற அளவில் பொதுமக்களின் பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடி பேர்வழிகள் என்று உறுதி செய்யப்பட்ட 2.75 லட்சம் பேரின் மொபைல் போன் இணைப்புகள் நீக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேரின் தொடர்பு எண்கள் ‘பிளாக்லிஸ்ட்’ எனப்படும் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது,’’ என்பது அரசு வெளியிட்டுள்ள தகவல்.

சர்வதேச அளவில் ₹85.49 ஆயிரம் கோடி
சர்வதேச அளவில் இணையவழி குற்றங்கள் பலமடங்கு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு (2024) ₹85.49 ஆயிரம் கோடி என்ற அளவில் பொருளாதார மோசடி நடந்துள்ளது. இந்தியாவில் மட்டும் ₹17,000 கோடி மோசடி நடந்துள்ளது. உலகளவில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில் நுட்ப புரட்சியால் பொருளாதார மோசடி அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் சாப்ட்வேர்களை ஹேக்கிங் செய்வது, அதிநவீன தீங்கிழைக்கும் சாப்ட்வேரை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது, நிதி மோசடிகளை அரங்கேற்றுவது, கேஓய்சி மோசடி, டிஜிட்டல் கைது போன்றவை மிகவும் அதிகமாக நடந்துள்ளது. சமூகத்தில் நடக்கும் மற்ற குற்றங்களை விட, சமீப ஆண்டுகளாக சைபர் கிரைம் குற்றங்களே அதிகளவில் நடந்து வருகிறது. உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் வசிக்கும் முகம் தெரியாத நபர்களாலும் இதுபோன்ற குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

Tags : India ,Google ,
× RELATED மாநில சுயாட்சியை வலுவிழக்க செய்யும்...