×

தியாகம், காத்திருப்பு, புரிதலுடன் பயணித்தால் ஜென் இசட் காதலும் சங்க கால காதல் போலவே வரலாற்றில் நிலைத்து நிற்கும்: காதலர் தின ஸ்பெஷல்

 

காதல் என்பது காலத்தால் அழியாத ஒரு உணர்வாக இருந்தாலும் சங்க காலத்தில் குறிஞ்சி நிலத்து பாறைகளில் வழிந்த தேனைப் போலவும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் திரைகளில் ஒளிரும் நோட்டிபிகேஷனைப் போலவும் அது தனது வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது. பண்டைய தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த சங்க காலத்து காதலின் கொண்டாட்டத்தையும் இன்றைய 90ஸ் கிட்ஸ் (ஜென் ஒய்) மற்றும் ஜென் இசட் தலைமுறையினரின் நவீன காதல் போக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது காதல் கடந்து வந்திருக்கும் தூரம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சங்க காலத்தில் காதல் என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல அது ஒரு வாழ்க்கை முறையாகவும் இயற்கையோடு இயைந்த ஒரு தவமாகவும் இருந்தது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலைகளாகப் பிரிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வில் ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு காதல் ஒழுக்கம் இருந்தது.

தலைவனும் தலைவியும் சந்திக்கும் களவுக்காலம் என்பது உயிரை உருக்கும் காத்திருப்போடு தொடர்புடையது. செல்போன்களோ தகவல் தொடர்பு சாதனங்களோ இல்லாத அந்த காலத்தில் தலைவனின் வருகைக்காகத் தலைவி காத்திருக்கும் அந்தத் தவிப்பு எத்தனையோ பாடல்களாக வடிவம் பெற்றுள்ளது. குறிஞ்சி நிலத்தில் பூக்கும் பூக்களும், பெய்யும் மழையும், வீசும் காற்றும் அவர்களின் காதலுக்கு சாட்சிகளாக இருந்தன. ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்று தொடங்கும் குறுந்தொகை பாடல் மூலம் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் கலந்ததைச் சொல்லும் அந்த வரிகள் இன்றும் காதலின் ஆழத்திற்குச் சான்றாக நிற்கின்றன. அன்றைய காதல் என்பது கண்களால் பேசுவது, மவுனத்தால் உரையாடுவது, இயற்கையின் சைகைகளைப் புரிந்துகொள்வது என மிக நுட்பமானதாக இருந்தது. தோழி என்பவள் காதலின் தூதுவளாகவும் வழிகாட்டியாகவும் இருந்தாள்.

தலைவன் தலைவியின் சந்திப்புக்கு அவள் வகுக்கும் வியூகங்கள் இன்றைய ஈவென்ட் மேனேஜ்மென்ட் திட்டங்களை விட நேர்த்தியானவை. ஆனால் இன்றைய ஜென் இசட் தலைமுறையின் காதல் உலகம் முற்றிலும் வேறானது. இணையத்தின் வேகத்தில் இயங்கும் இவர்களுக்குக் காத்திருப்பு என்பது மிகக் கடினமான ஒன்று. இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும் இவர்களின் காதல் மொழிகள் பரிமாறப்படுகின்றன. ஒரு ஸ்வைப் செய்தால் காதல் மலர்கிறது, மற்றொரு ஸ்வைப் செய்தால் அது கடந்து செல்கிறது. பழைய தலைமுறையினர் கடிதங்களை எழுதிப் பல நாட்கள் பதிலுக்காகக் காத்திருந்த சுகத்தை இன்றையத் தலைமுறை இழந்திருக்கலாம். ஆனால் தொழில்நுட்பம் இவர்களுக்கு வழங்கியிருக்கும் வசதிகள் காதலை இன்னும் எளிமையாகவும் அதே சமயம் சிக்கலாகவும் மாற்றியிருக்கிறது. ஜென் இசட் தலைமுறையின் காதலில் ஒளிவு மறைவு குறைவு.

அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகப் பேசுகிறார்கள். பிடித்திருக்கிறது என்பதைச் சொல்வதைப் போலவே பிடிக்கவில்லை என்பதையும் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடுகிறார்கள். இவர்களிடம் சென்டிமென்ட் டிராமாக்களுக்கு இடமில்லை. ‘வைப்’ செட் ஆனால் மட்டுமே பயணம் தொடர்கிறது. இல்லையெனில் ‘மூவ் ஆன்’ என்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விடுகிறார்கள். இது ஒரு வகையில் ஆரோக்கியமானதாகத் தோன்றினாலும், உறவுகளின் ஆழத்தை இவர்கள் உணர்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. சங்க காலத்தில் ஒருவரை ஒருவர் பார்ப்பதே அரிதான விஷயம். ஆனால் இன்று வீடியோ கால்களில் மணிக்கணக்கில் முகம் பார்த்துப் பேச முடிகிறது. தூரம் என்பது ஒரு தடையே இல்லை என்ற நிலையைத் தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் காதலன் நெல்லையில் இருக்கும் காதலியுடன் விர்ச்சுவல் டேட்டிங் செய்ய முடிகிறது.

கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் வழியாகவே உலகம் சுருங்கிவிட்டதால் இவர்களின் காதல் எல்லைகளையும் கடந்து பயணிக்கிறது. சாதி, மதம், இனம் என்ற வேலிகளை உடைப்பதில் இந்தத் தலைமுறை அதிக ஆர்வம் காட்டுகிறது.  மனிதநேயமும் புரிதலும் மட்டுமே காதலுக்கு அடிப்படை என்பதை இவர்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அதேசமயம் இந்த வேகமான உலகில் உறவுகள் முறிவதும் விரைவாகவே நடக்கிறது. சிறிய ஈகோ மோதல்கள் கூடப் பெரிய விரிசலை உண்டாக்கி விடுகின்றன. சகிப்புத்தன்மை என்பது சங்க காலத்துத் தலைவியிடம் இருந்த அளவுக்கு இன்றையத் தலைமுறையிடம் இருக்கிறதா என்பது சந்தேகமே. திடீரெனத் தொடர்பைத் துண்டிக்கும் கலாச்சாரம் இவர்களிடையே அதிகரித்து வருகிறது. இது எதிர் தரப்பினரை மனதளவில் பெரிதும் பாதிக்கிறது. இருப்பினும் காதலர் தினம் என்று வந்துவிட்டால் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருப்பதில்லை.

சங்க காலத்தில் காதலர்கள் கூடி மகிழத் திருவிழாக்களும் பூம்பொழில்களும் இருந்தன. இன்று காபி ஷாப்களும், மால்களும், கடற்கரைகளும் அந்தக் களங்களாக மாறியுள்ளன. நெல்லையை எடுத்துக் கொண்டால் தாமிரபரணி ஆற்றங்கரையும், மாவட்ட அறிவியல் மையப் பூங்காவும், மணிமுத்தாறு அணைப் பகுதிகளும் காதலர்களின் விருப்பமான இடங்களாகத் திகழ்கின்றன. கையில் ரோஜாப்பூவுடன் வெட்கப்பட்டு நின்ற காலம் மலையேறி, இன்று பொதுவெளியில் கைகோர்த்து நடக்கும் துணிச்சல் மிக்கக் காதலாக இது பரிணமித்துள்ளது. இவர்களுக்கு முந்தைய 90ஸ் கிட்ஸ் தலைமுறையினர் சற்று நிதானமானவர்கள். இவர்கள் அனலாக் உலகத்திற்கும் டிஜிட்டல் உலகத்திற்கும் இடையில் பிறந்தவர்கள் என்பதால் இரண்டு பக்கத்து நியாயங்களையும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் 2000-க்குப் பிறகு பிறந்த ஜென் இசட் குழந்தைகள் முழுக்க முழுக்க டிஜிட்டல் நேட்டிவ்ஸ்.

இவர்களுக்கு எல்லாமே இன்ஸ்டன்ட் ஆக வேண்டும். காதலும் அப்படியே. இன்றைய காதல் போக்குகளில் மாற்றங்கள் இருந்தாலும் அடிப்படை உணர்வு ஒன்றுதான். சங்க காலத்தில் தலைவன் தலைவிக்காக பூப்பறிக்க எந்த மலையையும் ஏறிச் செல்வான். இன்று காதலன் காதலிக்காக ஆன்லைனில் மதிப்புமிக்க பூச்செண்டை ஆர்டர் செய்வான். செயல் வடிவம் மாறியிருக்கிறதே தவிர அக்கறை என்னும் அடிப்படை குணம் மாறவில்லை. காதலர் தினம் என்பது வெறும் வாழ்த்துக்களையும் சாக்லேட்டுகளையும் பரிமாறிக்கொள்ளும் நாள் மட்டுமல்ல. அது இரு மனங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தருணம். சங்க இலக்கியங்கள் கற்றுத்தந்த தியாகமும், காத்திருப்பும், புரிதலும் இன்றைய நவீன காதலுக்கும் தேவைப்படுகிறது. அவசரக் கதியில் முடிவெடுக்காமல், ஒருவரையொருவர் ஆழமாகப் புரிந்துகொண்டு, குறைகளை ஏற்றுக்கொண்டு பயணித்தால் ஜென் இசட் காதலும் சங்கத் தமிழ் காதலைப் போலவே வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

தொழில்நுட்பம் வளரலாம், வாழ்க்கை முறை மாறலாம், ஆனால் அன்பின் மொழி என்றுமே மாறாது. அது குறிஞ்சிப் பூவைப் போல அரிதாக மலர்ந்தாலும், அதன் மணம் என்றும் வீசிக் கொண்டே இருக்கும். இந்த காதலர் தினத்தில் இளைய தலைமுறையினர் காதலைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அதன் புனிதத்தையும் ஆழத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும். அதுவே உண்மையான காதலர் தினக் கொண்டாட்டமாக அமையும்.

Tags : Valentine's Day ,
× RELATED பதின் பருவ காதலால் பாதிக்கப்படும்...