×

மவுன விரதத்தில் ஓபிஎஸ்; கையை விரித்த எடப்பாடி!

 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தற்போது எந்தக் கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசாத ஓபிஎஸ் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப்பெருமானை தரிசனம் செய்து தனது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மவுனமா இருந்தார். இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் ஓ.பன்னீர்செல்வம் தவிர்த்து சென்றார். தன்​னோடு இருந்த முக்​கிய நிர்​வாகி​கள் அனை​வ​ரும் ஒரு​வர் பின் ஒரு​வ​ராக திமுக, தவெக, அதிமுக என மாற்​றுக் கட்​சிகளில் ஐக்​கி​யம் ஆகி​விட்ட நிலை​யில், ஓபிஎஸ் இப்போது முற்றிலுமாக தனித்து விடப்பட்டுள்ளார். அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கழன்று கொண்ட நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்குவதால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.

தேர்தல் பிஸிக்கு நடுவில் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டினார். பல்வேறு மாவட்டங்களில் ஒருவித தொய்வு இருப்பதை கூட்டத்தில் சுட்டிக்காட்டிய அவர் மாவட்ட செயலாளர்களிடம் கண்டிப்பு காட்டி பேசினாராம். அதுமட்டுமல்ல, கூட்டணியில் இருந்த கட்சிகளே இப்போதும் தொடர்வதாகவும் புதிதாக பெரிய அளவில் எந்தக் கூட்டணியும் அமையவில்லை என்றும் நிர்வாகிகள் முணுமுணுக்க தொடங்கினார்களாம். எனவே, கூட்டணியின் உண்மையான பலம் குறித்த சந்தேகம் நிர்வாகிகளுக்குள் இருக்கத்தான் செய்கிறதாம். இது ஒருபுறமிருக்க தேர்தல் செலவுகளை கையாள்வதில் தலைமைக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு, இந்த மோதலின் மையப்புள்ளியாக மாறியுள்ளதாம். ஆட்சியில் இருந்த காலத்தில் தனிப்பட்ட ரீதியில் ஆதாயம் அடைந்ததை சுட்டிக்காட்டும் எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்தல் செலவுகளை அவர்களே முன்னின்று கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தினாராம். ஆனால் தலைமையிடம் இருந்து நிதி உதவி கிடைக்காமல் தங்களின் சொந்த பணத்தைச் செலவிட முன்னாள் அமைச்சர்கள் தயங்குவதாக தெரிகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அணுகுமுறை களப்பணிகளை பாதிக்கும் என்று குமுற தொடங்கி விட்டார்களாம். இந்த நிதி விவகாரம் அதிமுகவின் தேர்தல் பணிகளில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாம்.

காங்கிரஸ் தொகுதிகளில் மாற்றம்

தேர்தல் வந்து விட்டாலே சீட்டு கேட்டு டெல்லிக்கு படையெடுப்பதை தமிழக காங்கிரஸ் கட்சியினர் வாடிக்கையாக வைப்பதுண்டு. அதே மாதிரி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அதோடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என்பது வேட்பு மனு தாக்கலுக்கு முந்தைய நாள் வரை இழுபறியாகத்தான் இருக்கும். ஆனால் இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தொகுதி பங்கீட்டை முடிக்க வேகப்படுத்தி வருகிறது. காங்கிரஸ் போட்டியிடக்கூடிய தொகுதிகளில் மாற்றம் இருக்கும் என்றும் பேசப்படுகிறது. கடந்த தேர்தலில் சென்னையில் காங்கிரஸ் கட்சிக்கு வேளச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டது. தொகுதி எம்எல்ஏவாக அசன் மவுலானா இருக்கிறார். இந்த தொகுதியை திமுக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, காங்கிரசுக்கு வடசென்னையில் ஒரு தொகுதியை ஒதுக்க முடிவு செய்துள்ளதாம். இதனால் அசன் மவுலானா தேனி மாவட்டத்தில் தொகுதி கேட்டு மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறாராம். தற்போது காங்கிரஸ் வசம் உள்ள தென்காசி தொகுதியை கூட்டணி கட்சிகள் கேட்பதால், ஆலங்குளம் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

கண்டுகொள்ளாத பாஜக, வருத்தத்தில் தமாகா!

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கட்சியானது, பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்டது. இதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். அப்போது தனியாக போட்டியிட்ட பாஜக கூட்டணியில் முதல் கட்சியாக இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்றே சொல்லலாம். அப்போது சில கட்சிகளை அந்த கூட்டணியில் இணைப்பதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டவர் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். அதுமட்டுமல்ல தற்போதைய சட்டமன்ற தேர்தலிலும் பாஜ தலைவர்களின் தூதுவராக ஜி.கே.வாசன் செயல்பட்டு வந்தார். அதிமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணியில் இணைந்த கட்சிகளுடன் பாஜ சார்பில் முதன் முதலாக பேச்சுவார்த்தையை தொடங்கியது ஜி.கே.வாசன் தான். எனவே இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணியில் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் என்டிஏ கூட்டணியில் ஒரு சில கட்சிகள் சேர்ந்த உடன் ஜி.கே.வாசனை பாஜ தலைமை கண்டு கொள்ளவில்லை என்று தமாகாவினர் புலம்ப தொடங்கியுள்ளனராம். எனவே, இப்போதே எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்? என்றெல்லாம் பட்டியலை ஜி.கே.வாசன் தயார் செய்து வைத்துள்ளாராம்.

அதெல்லாம் சாதாரண மேட்டர்!

தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளை மேற்கொண்ட எனக்கு வெறும் 6 தொகுதிகள் மட்டும் கொடுப்பதா என்ற அதிருப்தியால் பணியில் இருந்து அண்ணாமலை விலகியதாக கூறப்படுகிறது. அதேபோல் டெல்லி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலை, எம்பி பதவிக்கு அடிபோடுவதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலையின் செயல்பாடுகளை பாஜ தலைமை வேடிக்கை பார்க்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளிக்கையில், ‘‘தமிழக பாஜகவில் தேர்தல் பொறுப்பு என்று யாருக்கும் அளிக்கப்படவில்லை. இது தேர்தல் வரைக்கும் ஆய்வுப் பணிகள் மட்டும் தான். மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு சென்று, அங்குள்ள பிரச்சனைகள் சரி செய்ய வேண்டும் என்று நியமனம் செய்யப்பட்டனர். இது நிரந்தரமான பொறுப்பு கிடையாது. அண்ணாமலை தந்தைக்கு உடல்நிலை சரியில்லை.. அப்படிதான் கூறி இருந்தார். இதுவொரு சாதாரண விஷயம் தான்’’ என கூறியுள்ளார். தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியதை சாதாரண மேட்டர் தான் என நயினார் அலட்சியப்படுத்தி இருப்பது அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

 

Tags : OPS ,Maunama ,Murukapperuman ,Subramaniya Swami Temple ,
× RELATED பதின் பருவ காதலால் பாதிக்கப்படும்...