தஞ்சையில் மாணவிகள் பங்கேற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

தஞ்சை, ஜன.26: தஞ்சையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாணவிகள் பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 11வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து பேரணியை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பணியாளர்கள் தங்கள் கைகளில் தேர்தலில் பங்கேற்றல் குறித்த விழிப்புணர்வு பிரசார வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொண்டனர். இப்பேரணியின்போது 18 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்களுக்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் அடையாள அட்டைகளை வழங்கினார். பேரணியில் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பான்செக்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ரெட்கிராஸ் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரணி ஆத்துப்பாலம், அண்ணா சிலை, ராஜாமிராசுதார் மருத்துவமனை வழியாக அறிஞர் அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில் நிறைவு பெற்றது. தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் அனைத்து நிலை அலுவலர்களும் 11வது தேசிய வாக்காளர் தினத்திற்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ.வேலுமணி, தாசில்தார் வெங்கடேசன், தேர்தல் தாசில்தார் சந்தனவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: