- பாஜக
- மம்தா பானர்ஜி
- முதல் அமைச்சர்
- தேர்தல் ஆணையம்
- மேற்கு வங்கம்
- சாகர் தீவு
- தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம்
கங்காசாகர்: மேற்கு வங்கத்தில் வாக்காளர் திருத்தப்பட்டியல் பணிகளை நடத்துவதற்கு பாஜ தொழில்நுட்ப பிரிவு உருவாக்கிய மொபைல் செயலிகளை பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையம் மீது முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தின் தெற்கு 24பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சாகர் தீவில் நடக்கும் கங்காசாகர் மேளாவிற்கான ஏற்பாடுகளை முதல்வர் மம்தா பானர்ஜி ஆய்வுசெய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா, ‘‘அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்வதில் தேர்தல் ஆணையம் தவறான, அரசியலமைப்புக்கு விரோதமான மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமான வழிமுறைகளை கையாளுகின்றது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் அனைத்து வகையான தவறான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. தகுதியுள்ள வாக்காளர்களை இறந்தவர்களாக குறிக்கிறது. முதியவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல்நலக்குறைவு உள்ளவர்களை நேரில் விசாரணைக்கு வருவதற்கு கட்டாயப்படுத்துகின்றது.
இந்த பணிக்காக பாஜவின் தகவல் தொழில்நுட்ப பிரிவினால் உருவாக்கப்பட்ட மொபைல் செயலிகளை பயன்படுத்துகின்றது. இது தொடர அனுமதிக்க முடியாது” என்றார். முதல்வர் மம்தாவின் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது மற்றும் அரசியல் உள்நோக்கம் நிறைந்தது என்று கூறி பாஜ நிராகரித்துள்ளது.
* ஹெலிகாப்டர் பறக்க அனுமதிக்கவில்லை
திரிணாமுல் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கொல்கத்தாவில் இருந்து பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தாராபித் காளி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பின் ராம்பூர்ஹாட்டில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தார். நேற்று பகல் 12.30மணிக்கு புறப்பட இருந்தார். ஆனால் அவரது ஹெலிகாப்டருக்கு டிஜிசிஏ அனுமதி கிடைக்கவில்லை. அதன் பின்னர் அவர் தனி விமானத்தில் சென்றார்.
