புதுடெல்லி: இந்தியாவின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை பிரதமர் மோடி வரும் 17ஆம் தேதி மேற்குவங்கத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயாரித்து சோதனை ஓட்டம் நிறைவு பெற்றுள்ளது. இந்த ரயில் மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா மற்றும் அசாமில் உள்ள கவுகாத்தி இடையே முதன்முறையாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலில் மொத்தம் 823 பயணிகள் அமரும் திறன் கொண்ட 16 பெட்டிகள் உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற அதன் இறுதி அதிவேக சோதனையின் போது, இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 182 கி.மீ வேகத்தை எட்டியது. இந்த ரயிலை பிரதமர் மோடி ஜனவரி 17 அன்று மேற்கு வங்கத்தின் மால்டாவில் இருந்து கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். ஹவுரா மற்றும் கவுகாத்தி இடையே வழக்கமான பயணிகள் சேவை ஜனவரி 18 அன்று தொடங்குகிறது. ரயில்களில் வழங்கப்படும் உணவு சேவையில் பிராந்திய உணவு வகைகள் இடம்பெறும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. கவுகாத்தியில் இருந்து புறப்படும் ரயில்களில் அஸ்ஸாமி உணவும், கொல்கத்தாவில் இருந்து தொடங்கும் ரயில்களில் பெங்காலி உணவுகளும் வழங்கப்படும்.
