×

2 நகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற மகாராஷ்டிராவில் காங்.குடன் கைகோர்த்த பாஜ: கட்சி தலைமைக்கே தெரியாமல் ஒப்பந்தம்; காங். கவுன்சிலர்கள் 12 பேர் சஸ்பெண்ட்

மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் கடந்த மாதம் 21ம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அம்பர்நாத் நகராட்சியில் மொத்தமுள்ள 20 இடங்களில் பாஜவின் கூட்டணி கட்சியான சிவசேனா 27 இடங்களிலும், மற்றொரு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜ 14 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 12 இடங்களிலும் சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற சிவசேனாவுக்கு 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது.

ஆனால் கூட்டணி கட்சியான சிவசேனாவை ஒதுக்கிதள்ளிவிட்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து தலைவர் பதவியை பாஜ கைப்பற்றிவிட்டது. பாஜவைச் சேர்ந்த தேஜஸ்ரீ கரஞ்சுலே பாட்டீல் நேற்று அம்பர்நாத் நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டணி கட்சியான சிவசேனாவின் மனீஷா வாலேக்கரை தோற்கடித்து தலைவர் பதவியை கைப்பற்றினார். ஆனால் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக, பாஜ தனது அரசியல் எதிரியான காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போல தான், அகோட் நகராட்சியிலும் நடந்தது. அகோட் நகராட்சியில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 35. இதில் 33 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. பாரதிய ஜனதா 11 இடங்களிலும் ஏஐஎம்ஐஎம் 5 இடங்களில் வெற்றி பெற்றன. இங்கும் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக பாஜ, ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. மேலும், பதவியை கைப்பற்றியது. பாஜவைச் சேர்ந்த மாயா துலே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரு நகராட்சிகளிலும் பாஜவின் உள்ளூர் தலைவர்களே கூட்டணி முடிவை எடுத்துள்ளனர். கட்சி தலைமையிடம் ஒப்புதல் பெறவில்லை என கூறப்படுகிறது.

உள்ளூர் மட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மாநிலத் தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அம்பர்நாத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கவுன்சிலர்களையும், வட்டாரத் தலைவர் பிரதீப் பாட்டீலையும் சஸ்பெண்ட் செய்து காங்கிரஸ் தலைமை அதிரடியாக நடவடிக்கை எடுத்தது. மாநில தலைமையின் ஒப்புதல் பெறாமல் பாஜவுடன் கூட்டணி அமைத்ததற்காக கட்சித் தலைவர்களுக்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியது.‘காங்கிரசுக்கும் பாஜவுக்கும் இடையே அமைக்கப்பட்ட இந்த கூட்டணி முறையான கூட்டணி அல்ல, கட்சித் தலைமையின் ஒப்புதலின்றி அமைக்கப்பட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் தெளிவுபடுத்தினார்.

இதே போல பாஜ தலைவரும் முதல்வருமான பட்நவிசும், எந்த ஒரு சூழ்நிலையிலும் காங்கிரஸ் உடனான கூட்டணியை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கண்டனக் குரல் எழுப்பினார். இத்தகைய கூட்டணியை அமைத்த உள்ளூர் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இதனிடையே பாஜவின் கூட்டணி கட்சியான சிவசேனா, பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தர்மத்திற்கு துரோகம் இழைத்துவிட்டதாக கடுமையாக சாடியுள்ளது. இதே போல உத்தவ் சிவசேனா கட்சியும், அதிகாரத்துக்காக அரசியல் எதிரிகளுடன் கைகோர்க்கும் அளவுக்கு பாஜ கீழ்த்தரமாக இறங்கிவிட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளனது.

Tags : BJP ,Congress ,Maharashtra ,Mumbai ,Shiv Sena ,Ambernath ,Nationalist Congress Party ,
× RELATED பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு