பிரதான ஹோமம் முடிந்தவுடன் அடுத்த சடங்கு அம்மி மிதித்தல்
ஆண்டாள் அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் என்று இந்த வைபவத்தை சொல்லுகின்றாள். மணமகன் பெண்ணின் வலக்கால் கட்டை விரலை தன் வலக் கையால் பிடித்து பெண்ணின் மாமா அல்லது மாமி ஆகியோர் சீதனமாகத் தந்த வெள்ளியிலான மெட்டியை அணிவிக்க வேண்டும். இந்த அம்மிக்கல்லானது அக்னிக்கு வடக்கே வைக்க வேண்டும்.
அந்த உறுதியான கல்லின் மீது பெண்ணின் வலதுகால் அடியை ஏற்றி வைக்க வேண்டும். அப்பொழுது ஆதிஷ்டேமம்.
அச்மானம் – அச்மேவ – த்வம் – ஸ்த்திரோ பவ.
அபிதிஷ்ட – ப்ருதன்யத: – ஸஹஸ்வ – ப்ருதனாயத:
என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தின் பொருள் என்ன என்றால், பெண்ணே! நீ இந்த உறுதியான கல்லின்மீது ஏறி நிற்பது எதற்காக என்றால் இந்த கல்லைப் போல உறுதிகொண்டவளாக நீ இருக்க வேண்டும். உன்னை எதிர்ப்பவர்களை வெற்றிகொள்ளும் ஆற்றலை நீ பெற வேண்டும் என்பது இதற்குப் பொருள்.
இதற்கு அடுத்துச் செய்ய வேண்டியது லாஜ ஹோமம். இந்த ஹோமம் மிக முக்கியமானது. அக்னித் தேவனுக்கு காணிக்கையாகப் பொரியை புதுமணத் தம்பதிகள் அளிப்பதுதான் லாஜ ஜ ஹோமம். இதற்கு மணப்பெண்ணின் சகோதரன் உடன் இருக்க வேண்டும். அந்த சகோதரன் நெற்பொ ரியை தன் சகோதரியின் கையில் கொடுக்க அவள் மணமகனிடம் கொடுக்க தீ வலம் செய்து அதனை அக்னியில் இடுகின்றார்கள்.
பொரியிடுதல், அக்னியை வலம் வருதல், அம்மி மிதித்தல் என்ற வரிசையில் இவற்றை இணைத்தும் செய்யலாம். அக்னியை வலம் வரும்பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள் உண்டு.
அந்த மந்திரத்தின் பொருள், “அக்னியே! இந்த ஹோமம் செய்கின்ற பெண் உம்மை அண்டி கேட்கின்றாள். தன்னுடைய கணவனுக்கு நீண்ட ஆயுளையும், நூறாண்டு வாழ்க்கையையும் வேண்டுகின்றாள்” இது முதல் மந்திரத்தின் பொருள்.
அதற்குப்பிறகு, அக்னியை வலம் வரும்பொழுது மூன்று மந்திரங்கள் உண்டு. முதல் மந்திரம், “அக்னி தேவனே! முன் காலத்தில் தேவர்கள் சூரியன் மகளாகிய சூர்யா தேவியை திருமண சீர்களோடு உம்மிடம் கொடுத்தார்கள். அதைப்போலவே இவளுக்கு சக்தி பலத்தை தந்து மக்கட் செல்வத்தையும் கொடுத்து அருள வேண்டும்.
அடுத்தொரு மந்திரம், எங்கள் பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ள வேண்டும். தடைகளை யெல்லாம் மிக எளிதாக நாங்கள் வெல்ல வேண்டும். இப்படி சொல்லிவிட்டு இந்த ஹோமத்தை நிறைவு செய்யலாம். இந்த ஹோமங்களெல்லாம் முடிந்த பின்னாலே செய்ய வேண்டிய ஹோமமானது ஒன்று உண்டு. அதையும் இப்பொழுது யாரும் செய்யவில்லை. ஹோம நிறைவு மந்திரங்களாளான அந்த ஹோமங்கள் இதுவரை செய்யப்பட்ட ஹோமங்களின் பலனை உறுதி செய்கின்றன. அந்த ஹோமத்திற்கு ஜயாதி ஹோமம் என்று பெயர்.
ஜயாதி ஹோமம் முடிந்தபிறகு மணப்பெண்ணின் இடையிலே கட்டிய தர்பைக் கயிற்றைக் கழற்றிவிடலாம். இதற்கும் மந்திரங்கள் உண்டு. அதற்குப்பிறகு, அந்த திருமணத்து அக்னியை எடுத்து அணையாமல் வாழ்நாள் முழுக்கக் காப்பாற்றி ஔபாஸனம் செய்ய வேண்டும். இல்லறத்தில் ஈடுபட்டவன் சந்தியாவந்தனம் போன்றவற்றை செய்வதற்கு தகுதி பெற்றவன். தினந்தோறும் இதனைச் செய்ய வேண்டும். அப்படி அக்னி ப்ரதிஷ்டைசெய்தபிறகு இதுவரை இதனை முறையாக செய்யாததற்கு ப்ராயச்சித்த ஹோமங்களைச் செய்து அதன்பிறகு தான் மற்ற ஹோமங்களைச் செய்ய வேண்டும்.
திருமணத்திலே எழுப்பப்பட்ட அக்னி அணையாமல் இருக்க வேண்டும். இதற்கென்று ப்ராயச்சித்த ஹோமங்கள் இருக்கின்றன. அந்த மந்திரம் அக்னியை வேண்டுவது. அக்னி பகவானே! எல்லோருடைய தோஷத்தையும் நீக்குகின்ற பக்தர்களால் வணங்கப்படும் நீர் குற்றமற்றவராக இருக்கிறீர்கள். உம்மை சேர்பவர்கள் மனதால் தரிக்கப்பட்டு தியானிக்கப்படுகிறீர். இந்த அவிசை உரிய தேவர்களிடம் சேர்க்கவும், எங்களுக்கு நலத்தைத் தரவும் என்று வேண்டி ப்ராயச்சித்த ஹோமத்தைச் செய்ய வேண்டும்.
அதற்குப் பிறகு, கிரஹப்ரவேசம் என்று சொல்வார்கள். கணவன் வீட்டுக்கு கல்யாணப் பெண் செல்வது. ஹோமம் அக்னியை ஒரு மண் பானையில் எடுத்துக் கொண்டு கணவன் ஒரு வண்டியில் மணமகளோடு தன் வீட்டுக்குச் செல்வது. திருமண மண்டபங்களில் இப்படி நடப்பது சாத்தியமில்லை என்பதால் பிள்ளை வீட்டார் தங்கும் பகுதியிலேயே இதுவொரு சடங்காக நடத்தப்படுகின்றது. இதற்கான மந்திரங்களைச் சொல்லி கிரஹப்ரவேசத்தை நடத்த வேண்டும்.
மணப்பெண் வீட்டிற்குள் நுழையும்போது வலது காலை முதலில் எடுத்து வைக்க வேண்டும். நேராக இடையில் நிறுத்தாமல் கூடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்படி சொல்லும்போதும், உட்காரும்போதும் சில மந்திரங்களெல்லாம் இருக்கின்றன. அதற்குப்பிறகு, அவர்களுக்கு பால் பழம் கொடுத்து த்ருவன் அருந்ததி நட்சத்திர தரிசனத்தைக் காட்ட வேண்டும்.
ஒரு காலத்திலே திருமண வைபவங்களெல்லாம் மாலை நேரத்திலே நடந்தன. இது முடியும் பொழுது இரவு ஆகிவிடும். நட்சத்திரங்கள் விண்ணிலே தோன்றிய பிறகு கிழக்கு அல்லது வடக்குத் திசைக்கு தம்பதிகள் சென்று மந்திரங்களைக் கூறி கணவன் மனைவிக்கு த்ருவன் அருந்ததி என்ற இரண்டு நட்சத்திரங்களைக் காண்பிக்க வேண்டும். த்ருவ நட்சத்திர தேவனிடம் ஒரு வேண்டுதலையும் சப்த ரிஷிகளில் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி காட்டி பதிவிரதையாக மனைவி விளங்க வேண்டும் என்ற பிரார்த்தனை இங்கே வைக்கப்படுகின்றது.
இதற்குப்பிறகு, மணமக்களுக்கு சந்தன நலுங்கிட்டு, மஞ்சள் ஆரத்தி செய்து ஆசீர்வதிக்க வேண்டும். பாலிகைகளுக்கு திருவாராதனம் சமர்பிக்க வேண்டும். சபையோர்களுக்கு தாம்பூலம் வழங்க வேண்டும்.
