கீழக்கரை: கீழக்கரையில் அரசால் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்ட பச்சைக் கடல் ஆமைகளை வேட்டையாடியது தொடர்பாக 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வனஉயிரின சரகத்தை சேர்ந்த வனச்சரக அலுவலர் கௌசிகா தலைமையில் வனவர் காளிதாஸ், வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று நகரில் உள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் கடலுக்குள் தீவிர ரோந்து சென்றனர். அப்போது கீழக்கரை அப்பாத்தீவுக்கு அருகே, சந்தேகத்திற்கு இடமான வகையில் 4 பேர் படகில் நின்றுகொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
இதில், பிடிபட்டவர்கள் கீழக்கரை பன்னாட்டார் தெருவைச் சேர்ந்த சில்வஸ்டர் (30), பெத்திரி தெருவைச் சேர்ந்த சத்யராஜ் (35), முனியசிவா (36), மீனவர் காலனியைச் சேர்ந்த பாலமுருகன் (25) ஆகியோர் எனவும், அரசால் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்ட பச்சை நிறக் கடல் ஆமைகளைப் பிடித்து அவற்றை அறுத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கீழக்கரை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து தலா 50 கிலோ, 30 கிலோ எடை கொண்ட பச்சைக் கடல் ஆமைகளை இறந்த நிலையில் மீட்டனர். இது தொடர்பாக 4 பேரையும் கைது செய்தனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கீழக்கரைப் பகுதிகளில் உள்ள மீனவ மக்களுக்கு கடல் ஆமை பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். அரசால் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்ட கடல் ஆமைகளைப் பிடித்தல், விற்பனை செய்தல் அல்லது அறுத்தல் ஆகிய குற்றங்களுக்கு 3 ஆண்டு முதல் 6 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்’ என்றனர்.
