×

மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து நடவடிக்கை; வந்தே பாரத் முதல் ஸ்லீப்பர் ரயில் இயக்குவதிலும் அரசியலா?

* தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் புறக்கணிப்பு

* மோடி அரசின் பாராமுகத்தில் சிக்கித்தவிக்கும் ரயில் பயணிகள்

இந்தியாவில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களின் நலனை குறிவைத்து சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும், அதை எல்லாம் புறந்தள்ளி, அதிவேக ரயிலான வந்தேபாரத் ரயில்களை கூடுதலாக அறிமுகம் செய்வதில் மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதனால் தற்போது வரை சுமார் 150க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் (75 ஜோடிகள் வரை) இயக்கத்தில் உள்ளன. ரயில்வே அமைச்சகம் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த ரயில்கள் பல்வேறு பெட்டி அமைப்புகளில் (8, 16, 20 பெட்டிகள்) நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற நகரங்களை இணைத்து பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வந்தே பாரத் ரயில்கள் இந்தியா முழுவதும் பல வழித்தடங்களில் அதிக பயணிகள் தேவை காரணமாக கிட்டத்தட்ட 100% இருக்கை நிரம்பலுடன் இயக்கப்படுகின்றன; குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் சென்னை-கோவை, சென்னை-மைசூர், சென்னை-திருநெல்வேலி, சென்னை-விஜயவாடா, திருவனந்தபுரம்-காசர்கோடு போன்ற வழித்தடங்களிலும், நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் பாதைகளிலும் அதிக பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. எப்போதும் நிரம்பி வழியும் முக்கிய வழித்தடங்களாக கீழே குறிப்பிட்ட வழித்தடங்கள் உள்ளன. அவை:
* சென்னை – கோவை
* சென்னை – மைசூர்
* சென்னை – திருநெல்வேலி
* செகந்திராபாத் – திருப்பதி
* மதுரை – பெங்களூரு
* திருவனந்தபுரம் – காசர்கோடு

தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் முதன்முறையாக அசாம் மாநிலம் கவுகாத்தி மற்றும் மேற்குவங்க மாநிலம் ஹவுரா இடையே இயக்கப்பட உள்ளது. ஜனவரி மூன்றாம் வாரத்தில் பிரதமர் மோடி இந்த ரயில் இயக்கத்தை தொடங்கி வைக்க உள்ளார். நாட்டில் இயக்கப்படும் ரயில்களில் தென் மாநிலங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் தான் தினமும் முழுமையாக நிரம்பி இயக்கப்படுகிறது.

தென் மாநிலங்களைப்போல் வட மாநிலங்களில் அந்த அளவுக்கு வரவேற்பு இல்லை. இருப்பினும் வந்தே பாரத் முதல் ஸ்லீப்பர் ரயில் வடமாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மேற்குவங்கம், அசாம் மாநிலங்களை குறிவைத்து இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாடு, கேரளா, புதுவை ஆகிய 3 தென் மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பா.ஜவுக்கு பெரிய அளவில் ஆதாயம் இல்லை என்பதால், ஆட்சியில் இருக்கும் அசாம் மாநிலத்தில் மீண்டும் வெற்றி பெறவும், எதிர்க்கட்சி அந்தஸ்தை கடந்த தேர்தலில் பிடித்த மேற்குவங்கத்தில் மம்தா ஆட்சியை வீழ்த்துவதை இலக்காக கொண்டும் வந்தே பாரத் முதல் ஸ்லீப்பர் ரயில் மேற்குவங்கம் மற்றும் அசாம் இடையே இயக்கப்படுவதாகவும், இந்த விஷயத்தில் தென் மாநிலங்களை மோடி அரசு புறக்கணித்து விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

தென் மாநிலங்களில் அடுத்தடுத்து அமர்ந்து செல்லும் வந்தே பாரத் ரயில் தான் இயக்கப்படுகிறது. முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தமிழ்நாடு மக்களுக்கு, மேற்கு வங்கம் மற்றும் அசாம் இடையே இயக்கப்போவதாக அறிவித்த மோடி அரசின் முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளித்து உள்ளது.

* கட்டணம் எவ்வளவு
* ஒரு வழிப் பயணத்திற்கான வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் கட்டணங்கள் ரூ.2,300-ல் இருந்து தொடங்கும்.
* வந்தே பாரத் படுக்கை வசதி ஏசி 3-அடுக்கு கட்டணம்: ரூ.2,300
* வந்தே பாரத் படுக்கை வசதி ஏசி 2-அடுக்கு கட்டணம்: ரூ.3,000
* வந்தே பாரத் படுக்கை வசதி ஏசி முதல் வகுப்பு கட்டணம்: ரூ.3,600

* 6 மாதங்களில் 8 ரயில் ஆண்டு இறுதிக்குள் 12
ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது,’ ரயில்வேத்துறையை நடுத்தர மற்றும் குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கான போக்குவரத்தாக மாற்ற பிரதமர் மோடி தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார். இதை மனதில் கொண்டு, கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கவுகாத்தி மற்றும் கொல்கத்தாவுக்கு இடையே இயங்கும் இந்த ரயிலை பிரதமர் மோடி இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கி வைப்பார்.

ரயில் இரு பக்கங்களிலிருந்தும் மாலை நேரத்தில் புறப்பட்டு மறுநாள் காலை சென்றடையும். ஒவ்வொரு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலும் 16 பெட்டிகளைக் கொண்டுள்ளது. பெட்டிகளின் அமைப்பு: 11 ஏசி 3-அடுக்கு, 4 ஏசி 2-அடுக்கு மற்றும் ஒரு ஏசி முதல் வகுப்பு பெட்டி. இந்த ரயிலில் 823 பயணிகள் பயணிக்க முடியும். அடுத்த 6 மாதங்களில் மேலும் 8 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். ஆண்டு இறுதிக்குள் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயரும்’ என்றார்.

* கேரளா உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் உண்டு
கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை முதல்முறையாக பா.ஜ கைப்பற்றியது. அங்கு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையும் குறிவைத்து கேரளாவுக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வழங்கப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,’கேரளா உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் வந்தே பாரத் ரயில்கள் கிடைக்கும். தற்போது, ​​வந்தே பாரத் சேர் கார் வகை ரயில் கேரளாவில் இயக்கத்தில் உள்ளது. நாங்கள் ஸ்லீப்பர் ரயில் உற்பத்தியை அதிகரித்துள்ளோம். சுமார் 1,500 கி.மீ தூரமுள்ள இரவு நேரப் பயணங்களுக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

* என்னென்ன வசதிகள்?
* வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் பெட்டிகளில் பயணிகள் வசதிக்காக மெத்தை படுக்கைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
* ரயில் பயணிகளின் நடமாட்டத்தை எளிதாக்கும் வகையில் மேல் படுக்கைகளுக்குச் செல்வதற்கான வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
* விமானங்களில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட பயோ-
வேக்குவம் கழிப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளது.
* மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், குழந்தை பராமரிப்புப் பகுதி மற்றும் குளிரூட்டப்பட்ட முதல் வகுப்புப் பெட்டியில் வெந்நீருடன் கூடிய குளியலறை வசதிகள் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன.
* மென்மையான இரவு நேர விளக்குகள், காட்சித் தகவல் திரைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பொது அறிவிப்பு அமைப்புகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் மாடுலர் சமையலறைப் பிரிவுகள் ஆகியவை உள்ளன.
* பெட்டிகளில் முழுமையாக மூடப்பட்ட நடைபாதைகள் மற்றும் தானியங்கி பெட்டிகளுக்கு இடையேயான கதவுகள் இருக்கும், இது சீரான காற்றின் தரம் மற்றும் நிலையான பெட்டி வெப்பநிலையைப் பராமரிக்க உதவும்.
* ஒவ்வொரு பெட்டியிலும் தனிப்பட்ட படிக்கும் விளக்குகள், பவர் சார்ஜிங் புள்ளிகள், மடிக்கக்கூடிய சிற்றுண்டி மேசைகள் பொருத்தப்பட்டுள்ளது.
* குறிப்பிட்ட நிலையங்களில் ரயில் கதவுகள் தானாகவே இயங்கும்.
* கவச் மற்றும் அவசர கால பேச்சு-பதில் அமைப்பு
* உயர் சுகாதாரத்தைப் பராமரிக்க கிருமிநாசினி தொழில்நுட்பம்
* மேம்பட்ட கட்டுப்பாடுகள், பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய ஓட்டுநர் அறை
* ஏரோடைனமிக் வெளிப்புறத் தோற்றம் மற்றும் தானியங்கி வெளிப்புறப் பயணிகள் கதவுகள்

Tags : West Bengal ,Assam assembly elections ,Vande Bharat ,Southern ,Tamil Nadu ,Modi government ,India ,
× RELATED பிரிந்து செல்பவர்களில் பெண்களே...