சென்னை: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த எம்ஜிஆர் பெயரை மறைக்க முயற்சி நடப்பதாக எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, 1981ம் ஆண்டு தமிழுக்கென்று தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார். அந்த பல்கலைக்கழகம் இன்றுவரை பல தமிழ் அறிஞர்களை உருவாக்கி பெரும்பேறு பெற்று வருகிறது.
பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நோக்கு, போக்கு, செயல் பகுதிகள் உள்ளன. 1981ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளில் இந்த பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது என்று உள்ளதே தவிர, அதை தோற்றுவித்த எம்ஜிஆர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேலும், அந்த இணையதளத்தில் உள்ள போட்டோ கேலரியில் இருந்த எம்ஜிஆர் படமும் நீக்கப்பட்டுள்ளதாம். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் எம்ஜிஆர் படத்தை உடனடியாக பதிவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
