சென்னை விமான நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு பயணிகள், ஊழியர்கள் கடும் அச்சம்: சமூகவலை தளங்களில் புகார்கள் பதிவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை பெருமளவு அதிகரித்துள்ளதால் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் புகார்கள் பதிவு செய்துள்ளனர். மீண்டும் நாய்கள் அட்டகாசங்களை குறைக்க எடுக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக, தெரு நாய்களின் தொல்லை மீண்டும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக உள்நாட்டு முனையம் மற்றும் சர்வதேச முனையங்களில் பயணிகள் வருகை பகுதிகளில் தரைத்தளங்களில் அதிகமான நாய்கள் சுற்றி அலைகின்றன. இதனால் பயணிகள் பெரும் பாதிப்பு அடைகின்றனர். அதுமட்டுமின்றி விமான நிலைய ஊழியர்கள், காவலர்கள் போன்றவர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

சில நேரங்களில் நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொண்டு, ஆக்ரோசமாக ஒலி எழுப்புவதால் பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் பீதி அடைந்து ஓடுகின்ற நிலை ஏற்படுகிறது. விமான நிலைய வளாகத்திற்குள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை ஓட ஓட நாய்கள் விரட்டிச் செல்கின்றன. சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் நாய்கள் தொல்லை பெருமளவு அதிகரித்து இருந்ததால் இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையம் மற்றும் வளாகத்திற்குள் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது.

அதன்படி மாநகராட்சி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், சுமார் 40க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து சென்னை ஆலந்தூரில் உள்ள மாநகராட்சி தெரு நாய்கள் அறுவை சிகிச்சை மையத்தில் இனக்கட்டுப்பாடு தடை ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. அதோடு இந்த நடவடிக்கையை, சென்னை விமான நிலையத்தில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நடத்துவதற்கும், இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில், சென்னை விமான நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து பராமரிப்பு மேற்கொள்வதற்காக, தனியார் விலங்குகள் பராமரிப்பு தொண்டு நிறுவனத்துடன், சென்னை விமான நிலையம் ஒப்பந்தம் மேற்கொண்டு, பணிகளை தொடங்கி நடத்தினர்.

ஆனால் இப்போது அந்த தனியார் தொண்டு நிறுவனத்தோடு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் செயல்பாட்டின் இல்லை என்றும், அதேபோல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, சென்னை விமான நிலையப் பகுதிகளில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து சென்று இனவிருத்தி அறுவை சிகிச்சை ஆபரேஷன் செய்யும் முறையும் செயல்பாட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து சமீப காலமாக, சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்களின் அட்டகாசங்கள், மீண்டும் பெருமளவு அதிகரித்துள்ளன.

இதனால் பயணிகள் மட்டுமின்றி, விமான நிலையத்தில் பயணம் மேற்கொள்ளும் முக்கிய பிரமுகர் போன்றவர்களின் பாதுகாப்புக்கும், பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில், நாய்கள் பிரச்னைகள் பெருமளவு அதிகரித்து, எங்கு பார்த்தாலும் நாய்கள் கூட்டமாக நின்று, பயணிகளுக்கு தொல்லை கொடுத்து வருகிறது என்று பயணிகள் தரப்பில் சென்னை விமான நிலைய இணையதளத்தில் சரமாரியாக புகார்கள் தெரிவித்து பதிவிடுகின்றனர்.

அதோடு பயணிகளின் கோபம் உச்சக்கட்டத்துக்கு சென்று, விமான நிலையத்தில் நாய்கள் அட்டகாசங்களை இந்திய விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுத்து உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால், விமான நிலைய பராமரிப்பை இந்திய விமான நிலைய ஆணையம் தனியாரிடம் ஒப்படைத்து விடலாம் என்றும் கோபத்தில் பதிவிட்டுள்ளனர்.

பயணிகளின் இந்த கடும் கோபத்தால் பதிவிடப்படும் பதிவுகள், சென்னை விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய சர்வதேச விமான நிலையமான சென்னை விமான நிலையத்தில், இதை போல் நாய்கள் தொல்லை பெருமளவு அதிகரித்துள்ளது. பயணிகள் மற்றும் விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் ஆகியோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
பயணிகள் புகார்கள் தொடர்பாக சென்னை விமான நிலையம் தரப்பில், அதே சமூக வலைதளமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட பதிலில் நாய்கள் பிரச்னை விமான நிலையத்தில் ஓரளவு இருக்கிறது. அதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கோருகிறோம். இந்த நாய்கள் பிரச்னையை கட்டுப்படுத்துவதற்கும், பயணிகளுக்கு நாய்களால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் பயணிகள் வந்து செல்லக்கூடிய இடங்களில் பெரும் அளவு நாய்கள் தொல்லைகள் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு நாய்களை கையாளுவதில் திறம்பட பயிற்சி பெற்ற சிலரை கொண்டு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: