களக்காடு தலையணையில் குளிக்க தடை: திருமலைநம்பி கோயிலுக்கு செல்லவும் அனுமதி மறுப்பு

 

களக்காடு: களக்காடு பகுதியில் விடிய, விடிய பெய்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து களக்காடு தலையணையில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு சுற்று வட்டார பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. இதனைதொடர்ந்து களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி நீர் பாய்ந்தோடுகிறது. இதனால் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் இன்று தடை விதித்தனர். அதே நேரத்தில் தலையணையை சுற்றி பார்க்க அனுமதி வழங்கப்பட்டு வருவதாக வனசரகர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.

இதுபோல திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையினால் வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து வனப்பகுதியில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும், நம்பியாற்றில் குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனசரகர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். களக்காடு பகுதியில் இன்று காலை நிலவரப்படி 48.40 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

Related Stories: