×

உத்தரபிரதேசத்தை விட பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு: புள்ளிவிவரங்கள் வெளியிடும் உண்மை

சென்னை: உத்தரபிரதேசத்தை விட பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. உத்தரபிரதேசத்தின் கடன் தொகையை விட தமிழ்நாட்டின் கடன் தொகை அதிகமாக இருப்பதாக ஒரு தரப்பினர் முன்வைக்கும் வாதம் தமிழ்நாடு அரசியலில் பெரும் விவாதமாக மாறி உள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேசத்துடன் தமிழ்நாட்டின் கடனை ஒப்பிடுவதே தவறு என்று கூறுகிறது புள்ளி விவரங்கள்.

மாநிலத்தின் கடனை வெறும் தொகையின் அடிப்படையில் கணக்கிடாமல், மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டு கணக்கிட வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். உள்நாட்டு உற்பத்தியில் கடன் %: 2025-26 நிதியாண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன், மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 26.1% ஆக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே 2024-25 நிதியாண்டில் 26.4% ஆகவும், 2023-24 நிதியாண்டில் 26.6% ஆகவும் இருந்துள்ளது.

இந்த தரவுகள் தமிழ்நாட்டின் கடன் விகிதம் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு படிப்படியாகக் குறைந்து வருவதை உணர்த்துகின்றன. ஆனால், உத்தரபிரதேசத்தின் ஒட்டுமொத்த கடன் மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29.4% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.35.7 லட்சம் கோடி ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டை விட மூன்று மடங்கு அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரபிரதேசத்தின் உள்நாட்டு உற்பத்தி ரூ.30.8 லட்சம் கோடி ஆக மட்டுமே உள்ளது.

இந்த விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால் உத்தரபிரதேசத்தின் கடன் விகிதம் தமிழ்நாட்டின் கடன் விகிதத்தை விட அதிகம். தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறை கடந்த நிதியாண்டை விடக் குறைந்து 2025-26 நிதியாண்டில் 3% ஆக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நடப்பு நிதியாண்டில் 11.19% வளர்ச்சியை எட்டி, இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்தது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் சராசரி உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7% ஆக இருந்துள்ளது.

கடன் அதிகரித்தாலும் தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடனில் மூழ்காமல் விரிவடைந்துள்ளது தரவுகளின் மூலம் உறுதியாகிறது. தமிழ்நாடு தனது 75% வருமானத்தைச் சொந்தமாகவும், 25% வருமானத்தை மட்டுமே ஒன்றிய அரசின் வரி பங்காகப் பெறுகிறது. ஆனால் உத்தரபிரதேசம் தனது சரிபாதி வருவாயை (50% மேல்) ஒன்றிய அரசின் மூலமாகவே பெறுகிறது.

அதேபோல் உத்தரபிரதேசத்தின் தனிநபர் சராசரி உற்பத்தி மதிப்பு ரூ.1.07 லட்சம் ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்து ரூ.3.53 லட்சம் ஆக உள்ளது. இவை உற்பத்திப் பெருக்கம், தொழில்மயமாக்கல், மனிதவள மேம்பாடு உள்ளிட்டவற்றால் சாத்தியப்படுத்தப்பட்டது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி குறியீடுகளில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

கடன் பெறுவது மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டு வருவது, வளமான பட்ஜெட்டை உருவாக்குவது உள்ளிட்ட பல இடங்களில் ஒரு அரசுக்கு உதவுகிறது. ஒரு மாநிலம் எவ்வளவு தொகையைக் கடனாகப் பெற்றது என்பதை மட்டும் கணக்கிடுவதை விட, கடன் தொகையைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், அதன் மூலம் பெற்ற வளர்ச்சி, வரி வருவாயைக் கொண்டு கணக்கிடுவதே சரியாக இருக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம் தமிழ்நாட்டை விடக் குறைவாகக் கடன் பெற்றிருப்பதாகக் கூறப்படும் உத்தரபிரதேசம், பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழ்நாட்டை விட மிகவும் பின்தங்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாடு உலகத்தர கட்டமைப்பு, தொழில் வளர்ச்சிக்கென அடுத்தகட்ட வளர்ச்சிக்காகப் பெறும் கடனை விட, அதிகத் தொகையை உத்தரபிரதேசம் அடிப்படை வசதிகளுக்காகப் பெற்று வருகிறது.

அதே சமயம் மற்ற மாநிலங்களை விட முன்பாகவே தொழில்மயமாக்கப்பட்ட மாநிலம், மனிதவள மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் மாநிலம், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் கடன் பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய மாநிலங்கள் அதிக அளவில் வரி செலுத்தினாலும், அவர்களுக்கான வரிப் பங்கை குறைவாகவே ஒன்றிய அரசு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, தமிழ்நாடு தனது கடனை உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தும் வேளையில், உத்தரபிரதேசம் இன்னும் அடிப்படை வசதிகளுக்காகவே கடன் பெறும் நிலையில் உள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாடு என அனைத்துக் குறியீடுகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதை இந்த புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

* 2025-26 நிதியாண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன், மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில்26.1% ஆக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே 2024-25 நிதியாண்டில் 26.4% ஆகவும், 2023-24 நிதியாண்டில் 26.6% ஆகவும் இருந்துள்ளது.

* உத்தரபிரதேசத்தின் தனிநபர் சராசரி உற்பத்தி மதிப்பு ரூ.1.07 லட்சம் ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்து ரூ.3.53 லட்சம் ஆக உள்ளது.

* நடப்பு நிதியாண்டில் 11.19% வளர்ச்சியை எட்டி, இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்தது.

Tags : Tamil Nadu ,Uttar Pradesh ,Chennai ,
× RELATED திட்டமிட்ட சிறப்பான...