×

குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி 7ம் தேதி வரை லேசான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:லட்சத்தீவு – குமரிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும், இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 7ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதியில் இரு காற்றின் இணைவின் காரணமாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நெருங்கி வந்ததால், நேற்று அதிகாலையில் கடலோரத்தில் ஓரிரு இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை பெரம்பூரில் 110மிமீ மழை பெய்துள்ளது. எண்ணூர் 100மிமீ, கத்திவாக்கம் 70மிமீ, விம்கோநகர், திண்டுக்கல் 60மிமீ, மாமல்லபுரம், மதுரவாயல், அயனாவரம், அண்ணாநகர், மணலி, செங்குன்றம் 50மிமீ, வில்லிவாக்கம், வளசரவாக்கம், கொளத்தூர், கொரட்டூர், பாரிமுனை, நெற்குன்றம் 40மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், லட்சத்தீவு – குமரிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும், இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும் வாய்ப்புள்ளது.

வட தமிழகம் புதுச்சேரி பகுதிகளில் அதிகாலையில் ஓரிரு இடங்களில் பனி மூட்டம் காணப்படும். பின்னர் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை வறண்ட வானிலைக்கான வாய்ப்புள்ளது. 8ம் தேதி முதல் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் இன்று முதல் 5ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளது.

ஆனால் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியசை விட அதிகமாக இருக்கும். 3ம் தேதி மதல் 5ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இயல்பைவிட குறைவாகவும் இருக்கும். சென்னையில் ஓரளவு மேகமூட்டம் காணப்பட்டாலும், அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்.

இந்நிலையில், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் இன்று முதல் 5ம் தேதி வரை வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags : Kumari Sea ,Chennai Meteorological Department ,Chennai ,Lakshadweep – Kumari Sea ,southwest Bay of Bengal ,Lankan ,
× RELATED திட்டமிட்ட சிறப்பான...