×

கார்களின் விலை கிடுகிடு உயர்வு: புத்தாண்டு தினத்தில் அதிர்ச்சி

சென்னை: புத்தாண்டு தினமான நேற்று முதல் முன்னணி நிறுவனங்களின் கார்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை, நேற்று முதல் புதிய கார்களின் விலையை முன்னணி நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் உற்பத்திச் செலவு உயர்வு ஆகியவற்றை இதற்கு காரணமாக நிறுவனங்கள் கூறியுள்ளன.

டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், ஹோண்டா, ரெனால்ட், பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை 3% வரை உயர்த்தியுள்ளன. ஹூண்டாய் நிறுவனம் 0.6% வரையும், ரெனால்ட் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் 2% வரையும், பிஎம்டபிள்யூ நிறுவனம் 3% வரையும் விலையை உயர்த்தியுள்ளன.

புத்தாண்டு அன்று புதிய கார் வாங்க திட்டமிட்டிருந்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு இந்த விலையேற்றம் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. கார்களைப் போலவே வணிக சிலிண்டரின் விலையும் ஏறியுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை நேற்று முதல் ரூ.110 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு வணிக சிலிண்டரின் விலை தற்போது ரூ.1849.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை மகிழ்ச்சியுடன் தொடங்கலாம் என்று நினைத்தால், அன்றாட தேவைகளுக்கான செலவுகள் அதிகரிப்பது வேதனை அளிப்பதாகவும் உணவகங்களில் விலை உயர்ந்தால் அது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பட்ஜெட்டை பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொழிலதிபர்கள் தரப்பில் கூறுகையில், ‘‘ஏற்கனவே வணிக ரீதியாகப் பல சவால்களைச் சந்தித்து வரும் வேளையில், எரிவாயு விலை உயர்வு தொழிலை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும்’’ என தெரிவித்துள்ளனர். இந்த இரட்டை விலையேற்றம் புத்தாண்டின் தொடக்கத்திலேயே பணவீக்கத்தை கூட்டுமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

Tags : New Year's Day ,Chennai ,
× RELATED திட்டமிட்ட சிறப்பான...