சென்னை: தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர்கள் குழு, தலைமைச் செயலகத்தில் இன்று பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களை போலீசார் கைது செய்வதும், விடுவிப்பதுமாக இருக்கின்றனர். புத்தாண்டு தினத்திலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லாமல் பெண் ஆசிரியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து 7வது நாளாக நேற்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமவேலைக்கு சமஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் நிலையில், அந்த கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தை தொடரப் போவதாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டு தற்போது மாவட்ட அளவிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக 6ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இந்நிலையில், மேற்கண்ட போராட்ட ஆசிரியர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜாக்டோ-ஜியோ, போட்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அரசு தரப்பில் இன்று பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. இதற்காக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பேச்சு வார்த்தை நடத்த இருக்கின்றனர்.
